இன்று முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 86 லட்சத்து 28,324 பேர் இருக்கின்றனர். இவர்களில் 28 லட்சத்து 46,936 பேர் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 11 லட்சத்து 54,077 பேர் மட்டும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்படி, பார்த்தால் 33 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 13 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். எஞ்சிய 57 லட்சத்து 81,388 முதியவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏதுவாக இன்று (ஆகஸ்ட் 8) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து, முதியவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Covid 19 Vaccine Mixing: ’கோவிஷீல்ட் கோவேக்சின் கலந்துபோட்டால் அதிகமான பலன்’ : கொரோனாவுக்கு எதிரா ஸ்ட்ராங் பாதுகாப்பு - ICMR


தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேரும், ஈரோடில் 198 பேரும், சென்னையில் 194 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 


குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில்1,839 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,18,777 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.   


இறப்பு எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை. மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,289 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8337 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது.    


சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,286 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1316 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3435 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.