தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.



இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக இன்று ஒரேநாளில் திருவாரூர் மாவட்டத்தில் 110 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இதேபோன்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 266  சிகிச்சை பெற்று வந்த நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் அடுத்த பதினைந்து தினங்களுக்கு இவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

மேலும் திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை நாளுக்கு நாள் தொற்று பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1073-ஆக குறைந்துள்ளது.

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு வருகிற 28-ஆம் தேதி வரை தொடரும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆகையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேனீர் கடைகள், அரசு மதுபான கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. மேலும் சாலையோர கடைகளுக்கும் அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது, தமிழ்நாடு அரசு எங்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சாலையோர வியாபாரிகள் வைத்துள்ளனர்.