இந்தியாவில் மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கொரோனா கிருமி பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் விலங்குகளில் இதன் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் அண்மையில் கொரோனா தொற்றால் இரண்டு சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில், நம் அண்டை நாடான இலங்கையிலும் உயிரியல் பூங்காவில் ஒரு சிங்கத்துக்கு கொரோனா தொற்றியிருக்கிறது. தெகிவளை எனும் இடத்தில் உள்ள தேசிய வனவிலங்கு காட்சியகத்தில், தோர் என்கிற சிங்கத்துக்கு கொரோனா தொற்றியது உறுதியாகி இருக்கிறது. கடந்த மூன்று நாள்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தோர் சிங்கத்துக்கு, பின்னர் சளியும் இருமலும் அதிகமானது. அதையடுத்து விலங்குக்காட்சி சாலை அதிகாரிகள் தோர் சிங்கத்தின் சளியை மாதிரி எடுத்து, கிழக்கு இலங்கையில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்துக்கு சோதனைக்கு அனுப்பினார்கள். அங்குள்ள கால்நடை மருத்துவ அறிவியல் துறையினர் அதை ஆய்வுசெய்தனர். அதில், தோர் சிங்கத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. 


முன்னதாக, 2012ஆம் ஆண்டில் தென்கொரிய நாட்டிலிருந்து இந்த சிங்கத்தை தெகிவளை விலங்குக்காட்சி சாலைக்குக் கொண்டுவந்தனர். அங்கிருந்த மற்ற நான்கு சிங்கங்களுடன் இதுவும் காட்சிக்கு விடப்பட்டது. தோர் சிங்கத்துக்கு கொரோனா தொற்றியதை அடுத்து மற்ற சிங்கங்களுக்கும் பிசிஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து, சிங்கத்தைப் பராமரித்து வந்த மூன்று பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் என விலங்குக்காட்சி சாலை அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். 


இதற்கிடையே, கடந்த இரண்டு வாரங்களில் தெகிவளை காட்சிசாலையில் இருந்த வரிக்குதிரை ஒன்றும், நீர் யானை ஒன்றும் அடுத்தடுத்து உயிரிழந்தன. ஆனால், அப்போது அங்கு கொரோனா கிருமி பரவியது கண்டறியப்படவில்லை. எனவே, அந்த இரண்டு விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் அவை இரண்டும் கொரோனா தாக்கியதால் இறந்துபோயிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்பதால், துல்லியமான முடிவுகளை அறிய இந்தியாவிடம் உதவி கேட்கவும் இலங்கை அரசு முடிவுசெய்துள்ளது. இதை அந்நாட்டின் வன உயிரினத் துறை இணை அமைச்சர் விமலவீர திசநாயக்க தெரிவித்துள்ளார். 


இலங்கையைப் பொறுத்தவரை, நேற்றுவரை அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 53-ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 95ஆயிரத்து 434 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 35 ஆயிரத்து 245 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அந்நாட்டில் 2 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிவேகமாகப் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் டெல்டா கொரோனா கிருமியானது இலங்கையின் தலைநகர் கொழும்புவில் 5 பேருக்கு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் இருந்து வந்த இருவருக்கு டெல்டா கிருமி தொற்றியிருந்தது. இப்போது நாட்டுக்கு உள்ளேயே அதன் தாக்கம் கண்டறியப்பட்டிருப்பதை முன்னிட்டு இலங்கை மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.