திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. அதில் ஒரு சில தளர்வுகளுடன் அமுல்படுத்தபட்ட நிலையில், நாளையுடன் முடிவடைகிறது இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ஆம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது, இரண்டம் வகையில் இடம்பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்தளர்வுகளும், கூடுதலாக செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  




• மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 
• காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 
• உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். 
• அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.     இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 
• சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும். 
• அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.



• வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். 


திருவண்ணாமலை மாவட்டத்தில்  இதுவரை  மாவட்டத்தில் 47 ஆயிரத்து 700 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 45ஆயிரத்து 695 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 206 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 5 நபர்கள். இதுவரையில் கொரோனா தொற்றால்  இறந்தவர்கள் 560 ஆக உயர்ந்துள்ளது 



மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் ,  உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது  1445  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்படுகிறது. தற்போது 18 வயது முதல் 45 வயதுவரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் 49,252 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.