தமிழ்நாட்டில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் காரணத்தால் தொற்று பாதிப்பு பெரிதாக இருக்காது என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு பரவத் தொடங்கியது. 3 ஆண்டுகள் கடந்தும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடு இல்லை. முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பு விட இரண்டாம் அலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் தினசரி தினசரி தொற்று பாதிப்பு 1000 -த்துக்கும் கீழ் இருந்த நிலையில் அது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் தேதியிலிருந்து தினசரி தொற்று பாதிப்பு 3000 –த்தை கடந்து பதிவாகி வருகிறது.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 3,824 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,389 பேர் இந்தியாவில் தொற்று பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினசரி தொற்று பாதிப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் என்பது 2.61 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு சதவீதம் 1.91 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அது அதிகரித்து தினசரி தொற்று பாதிப்பு 2.87 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிப்பு 2.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1,784 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திலும் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் 100க்கும் கீழ் இருந்த தினசரி தொற்று பாதிப்பு தற்போது 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 172 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 99 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் 909 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் சுகாதார துறை அமைச்சர் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திக்கும் போது, “ வரும் ஏப்ரல் 10 மற்றும் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நடத்தப்படும். கொரோனா தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்ட நிலையில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இறப்பு எதுவும் இல்லை” என தெரிவித்தார்.