கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும்  டெல்டா வகை கொரோனாவினால் மக்கள் பாதித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அவர்களுக்கு குடலிறக்கம், பசியின்மை, காது கேளாமை, இரப்பை பிரச்னை, இரத்தம் உறைதல் போன்ற அறிகுறிகளும்  ஏற்படுவதாக தெரிவிக்கிறது


உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைந்தப்பாடில்லை. முதல் அலையின் போது ஏற்பட்ட தாக்கத்தினைச் சமாளிக்க முடியாத நிலையில் இரண்டாம் அலை அதன் வேகத்தினைக்காட்டத்தொடங்கியது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது, மருத்துவக்கட்டமைப்புகளை மேம்படுத்தும் போன்றப்  பணிகளில் ஈடுபட்டதோடு ஊரங்கும் அமல்படுத்தப்பட்டமையின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறையத்தொடங்கியுள்ளது. மேலும் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழக்க நேரிடும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் தான் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வரத்தொடங்கியுள்ளனர். இச்செயலினால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நேரத்தில்தான்,  தற்பொழுது கொரோனாவின் மாறுபாடான புதிய டெல்டா வகை கொரோனா மக்களை பீதியடைச்செய்துள்ளது.


விஞ்ஞான ரீதியாக டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உருமாறிஉள்ளது.  கொரோனா தொற்றின் 2 வது அலைக்கு பின்னர் இந்த மாறுபட்ட டெல்டா வகை வைரஸ் கடும் பாதிப்பினை உண்டாக்கலாம் என எய்ம்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வகை கொரோனா வைரஸ், தற்பொழுது உலகெங்கிலும் மாறுபட்ட பரிமாண வளர்ச்சியுடன் டெல்டா  வகை வைரஸாக உருமாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முதன் முதலில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இவ்வகை கொரோனா தொற்று பரவியத்தொடங்கியதால் இதற்கு இந்திய வகை கொரோனா வைரஸ் என்றும் கூறப்படுகிறது.


இந்த புதிய வகை கொரோனா தொற்றினால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், குடலிறக்கம், பசியின்மை, காது கேளாமை, இரப்பை பிரச்னை, இரத்தக் கட்டிகள் உருவாதல் போன்ற அறிகுறிகள்  ஏற்படுகிறது. இந்நிலையில் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும்  டெல்டா வகை கொரோனாவினால் மக்கள் பாதித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.  இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டகிரிட்டிவ் பயோலஜி என்ற அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை 60 நாடுகளில் பரவியுள்ள இந்த மாறுபட்ட டெல்டா வைரஸ் கோவாக்ஸின் , கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 63 பேர் டெல்டா வகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் 27 பேர் தடுப்பூசி போட்டவர்களாக இருந்துள்ளனர். அதில்  10 பேர் கோவாக்சினும் 53 பேர் கோவிஷீல்டும் போட்டுள்ளனர். மேலும் ஒரு டோஸ் போட்டவர்கள் 76.9 சதவீதம் பேரும் இரண்டு டோஸ் போட்டவர்கள் 60 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த 63 பேரில் இதுவரை யாரும் இறப்புகளை சந்திக்கவில்லை. ஆனாலும் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இந்த வைரஸ் தொற்று ஆரம்ப நிலை என்பதால், வைரஸின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும், தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது. இருந்த போதும், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பட்சத்தில், தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் தேவையற்ற விளைவுகளை தவிர்க்கலாம் என ஆய்வுள் கூறுகின்றன. எனவே எவ்வளவு சீக்கிரம் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொள்கிறோமோ அந்தளவிற்கு பாதிப்பிலிருந்து நம்மைக்காத்துக்கொள்ள முடியும்.