நாடு முழுவதும் இணை நோயுடன் உள்ள 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முதலில் ஜைகோவ் டி தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்றின் பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. மற்ற நாடுகளை விட கொரோனா தொற்றின் 2 வது அலை இந்தியாவில் மிகப்பெரியத் தாக்கத்தினை ஏற்படுத்தியது. அந்நேரத்தில் மருத்துவ வசதி முறையாக கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்ட நிலை அனைத்தையும் கண்கூடாக காணமுடிந்தது. அச்சூழலில் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியது.



தற்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கோவாக்சின், கோவிசீல்டு, மாடர்னா, ஸ்புட்னின் வி, ஜான்சன் & ஜான்சன் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முன்பை விட மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது அலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஆனால் மூன்றாம் அலையில் நிச்சயம் பாதிப்பு இருக்கக்கூடும் எனவும், அதோடு வருகின்ற அக்டோபரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உச்சத்தில் இருக்கும் என தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.


எனவே இத்தொற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் தான் 12 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்தியாவைச்சேர்ந்த ஜைடஸ் கெடிலா என்ற நிறுவனத்தின் ஜைகோவ் டி தடுப்பூசியினை அவரச தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி மற்ற ஊசிகளைப்போல் வலி தெரிய வாய்ப்பே இல்லை. இதில் ப்ளாஸ்மிட் டிஎன்ஏ எனும் மரபணுக்கூறை ஒருவரின் உடலில் செலுத்திய பின் அந்த டிஎன்ஏவானது உடலுக்குள் சென்று கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உடலின் செல்களைக் கட்டளையிடும். அதன்பிறகு, அந்த ஸ்பைக் புரதத்திற்கு எதிரான  எதிர்ப்பு சக்தி ஆண்ட்டிபாடிகளை உடல் உற்பத்தி செய்யும் தன்மையினைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.


எனவே இந்த வகையான தடுப்பூசியினை முதலில் 12 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் அதிலும் குறிப்பாக இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் என  தேசிய எதிர்பாற்றல் தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இதனை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.



மேலும் கொரோனா தொற்றின் 2 அலைகளிலும் என்னென்ன விஷயங்களையெல்லாம் செய்ய மறந்தோமோ?அதனை எல்லாம் மேம்படுத்தவும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை அதிகப்படுத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.