கொரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களின் வசதிக்காக அருகிலுள்ள மையத்தைக் கண்டறிந்து எளிதாகப் பதிவு செய்யும் நடைமுறையை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவந்த நிலையில் அதனைக்கட்டுக்குள் வருவதற்காக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ள ஆரம்பித்தது. ஆரம்ப கட்டத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்குப் பயத்தின் காரணமாக முன்வராமல் இருந்தனர். ஆனால் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக அதிகளவில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தடுப்பூசிகளுக்குத்தான் தட்டுப்பாடு நிலவிவருகிறது.


இந்நிலையில் தான், இதுப்போன்ற பிரச்சனைகள் எல்லாம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்திய அரசு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களை கோவின், ஆரோக்கிய செயலி வலைத்தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதன்படி தான் தற்போது பெரும்பாலான மக்கள் தடுப்பூசிகளுக்கான முன்பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவினை எளிதாக்கும் விதமாக பெரும்பாலோனோர் பயன்படுத்தும் வாட்ஸ்-அப்பிலும் இனி தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள இடத்தினைத் தேர்வு செய்யும் நடைமுறை அறிமுகமாகியுள்ளது. இனி வாட்ஸ் அப்பில் இதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்…






வாட்ஸ்-அப்பில் தடுப்பூசி இடத்தைப் பதிவு செய்யும் வழிமுறை!


வாட்ஸ்-அப் பயனர்கள்  முதலில் 9013151515 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தங்களது மொபைலில் சேமித்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் நம்முடைய மொபைலில் பதிவு செய்துள்ள எண்ணுக்கு புக் ஸ்லாட் என டைப் செய்து அனுப்பவும். இதனையடுத்து அந்த எண்ணுக்கு 6 இலக்க ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். இதனை நீங்கள் சாட்டில் அந்த ஒரு முறை கடவுச்சொல்லினை அனுப்ப வேண்டும். உங்களது One time password-ஐ உள்ளீடு செய்தவுடன், கோவின், ஆரோக்கிய செயலி போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை அந்த போட் காட்டும்.


இதனையடுத்து அதில் நீங்கள் தடுப்பூசி செலுத்தவிருக்கும் இடத்தைப்பதிவு செய்ய விரும்பும் நபரின் எண்ணை இப்போது டைப்செய்ய வேண்டும். இதில் ஏற்கனவே பதிவாகியுள்ள தடுப்புசியின் விவரங்களைக் காண்பிக்கும். இப்போது நீங்கள் எந்தப்பகுதியில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அந்த பின்கோடினை கிளிக் செய்ய வேண்டும். இறுதியில் பயனர்கள் அஞ்சல் எண் மற்றும் தடுப்பூசி வகையின் அடிப்படையில் விருப்பமான தேதி மற்றும் இடத்தை தேர்வு செய்யலாம்.



குறிப்பாக இந்தியாவில் இதுவரை 58.82 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 39,62,091 நபர்களுக்கு  முதல் தவணை தடுப்பூசியும், 16,48,025 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.