கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 


கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தபட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ஆக 14,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.


இவர்கள் அனைவரும் மருத்துவ பணிகள் கழகம் சார்பாக பணியில் நியமனம் செய்யப்பட்டார்கள், அவர்களின் பணி காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைவருக்கும் பணி நியமனம் செய்யப்படும் என எதிர்பாரக்கப்பட்டது. இந்த நிலையில் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என்று தற்பொழுது தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  


இதற்கு முன்பாக இரண்டு வருடங்களாக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாத காலம் பணி நீட்டிப்பை சுகாதாரத்துறை செய்து வந்தது இந்த நிலையில் நேற்றுடன் அவர்களின் பணிக்காலம் என்பது முடிந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது மீண்டும் அவர்களின் பணி என்பது தொடர வாய்ப்பில்லை என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேல் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் மேற்கண்டவாறு நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக செவிலியர்களின் சேவைகளை 31.12.2022 க்கு அப்பால் நீட்டிக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக என்று தமிழக சுகாதாரத் துறை சார்பில் சுகாதாரத் துறை செயலாளர் அரசாணையை வெளியிட்டுள்ளார்.