Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் இன்று 2,312 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 312 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,48,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,312ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 31 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரத்து 902 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 144 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 144 ஆக உள்ளது.
கோவை 252, ஈரோடு 152, தஞ்சை 158, சேலம் 168, திருப்பூர் 138, செங்கல்பட்டு 127, கடலூர் 83, திருச்சி 84, திருவண்ணாமலை 91, நீலகிரி 58, நாமக்கல் 69, கள்ளக்குறிச்சி 70, திருவள்ளூர் 71, கன்னியாகுமரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 7 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8286 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 7 பேர், கோவை, கடலூர், திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29,230 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,986 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,68,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரியவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் ஐந்து பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து காணப்படும் ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி, இன்று கலந்துரையாடிகிறார். கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 23,000 கோடி தொகுப்பிற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
VACCINE DOSES |
(As on 16 July 2021) |
SUPPLIED |
41,10,38,530 |
IN PIPELINE |
52,90,640 |
CONSUMPTION |
38,58,75,958 |
BALANCE AVAILABLE
|
2,51,62,572 |
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 41 கோடி (41,10,38,530) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் வீணானது உட்பட இன்று காலை 8 மணி வரை , 38,58,75,958டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2.51 கோடிக்கு மேற்பட்ட (2,51,62,572) தடுப்பூசி டோஸ்கள், கையிருப்பில் உள்ளன.
வரும் நாட்களில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேலும் 52,90,640 கொரோனா தடுப்பூசிகளை பெறவுள்ளன.
2021 ஜூன் 21ம் தேதி முதல் தொடங்கப்பட்ட புதிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 17.6 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,30,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாராந்திர தொற்று உறுதி விகிதம் (Weekly Positivity Rate) 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.14% ஆக உள்ளது. தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 25 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.99% ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 44.00 கோடி ஆகும்.
நாடு முழுவதும், கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 542 பேர் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
2021 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஜப்பான் டோக்யோ நகரில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,308 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இது, கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 7 நாட்கள் உள்ளன
புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, மணிப்பூர் மாவட்டத்தில், ஜூலை 18ம் தேதி முதல் 10 நாட்கள் முழுமையான பொது முடக்கநிலை அமல்படுத்தப்படுகிறது.
திரை அரங்குகள், உணவு விடுதிகள் போன்ற பொது இடங்களில் கலந்து கொள்ள கொரோனா தடுப்பூசி சான்றிதழை பிரான்ஸ் நாடு காட்டாயமாக்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களில், 52% பேர் இந்த இரண்டு மாநிலங்களில் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி எண்ணிக்கை குறைந்து வருவதால், கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மாவட்டங்களுக்கு இடையே கடும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறது. உதாரணமாக, சென்னையில் 50% பயனாளிகள் குறைந்தது முதற்கட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட்ங்களில் இந்த எண்ணிக்கை 10%க்கும் குறைவாகவே உள்ளது
கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் இன்று (16.07.2021) மருத்துவ முகாம்கள் (Medical Camp - SWAB test) நடைபெறும் இடங்கள்.
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 18004255019, 0422-2302323, 9750554321.
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று (16.07.2021) மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரியவும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -