தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாகவே தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக ஆட்சி அமைக்க அவ்வப்போது புதிய கட்சிகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
திருமாவை கூட்டணிக்கு அழைக்கும் தவெக:
நடிகர் விஜய் தனது கட்சி அறிவிப்பை வெளியிட்டபோதே தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின்பு, நடிகர் விஜய் கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் தன்னுடைய கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்தார். விஜய்யின் கொள்கைகள், கோட்பாடுகளை காட்டிலும் தமிழக வெற்றிக் கழகத்தினருடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று நடிகர் விஜய் வெளிப்படையாக அறிவிப்பை வெளியிட்டார்.
விஜய்யின் இந்த அறிவிப்பானது தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைக்கு விடுக்கப்பட்ட நேரடி அழைப்பாகவே கருதப்பட்டது. ஏனென்றால், விஜய்யின் இந்த அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கோரிக்கையால் தி.மு.க. கூட்டணியில் பெரும் சர்ச்சை வெடித்தது.
அதிருப்தியில் தி.மு.க.:
இந்த சூழலில், டிசம்பர் 6ம் தேதி அம்பதே்கர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன், நடிகர் விஜய் இணைந்து ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.
விடுதலைச் சிறுத்தைகளின் இந்த நகர்வு தி.மு.க. தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தங்களது கூட்டணிக்கான காய்களை சத்தமே இல்லாமல் நகர்த்தி வரும் நிலையில், இதே கூட்டணியுடன் வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க தி.மு.க. விரும்புகிறது. இந்த கூட்டணியை உடைக்கும் விதமாக விஜய் காய் நகர்த்தி வருவதை தி.மு.க. தலைமை விரும்பவில்லை.
பங்கேற்பாரா? மாட்டாரா?
இந்த நிலையில், தனது பக்கம் திருமாவளவனை இழுக்கும் விஜய்யின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியாக விஜய் – திருமா ஒரே மேடையில் பங்கேற்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜய் பங்கேற்கும் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கப் போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. திருமாவளவனின் இந்த திடீர் முடிவிற்கு திமுக பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் களமிறங்குவது நல்ல முடிவாக இருக்காது என்பதால் தொடர்ந்து திருமாவை தனது தவெக-வுடன் கூட்டணி அமைக்க விஜய் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதனால், விஜய் தரப்பினரும் திருமாவை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூட்டணி விவகாரத்தில் திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவிற்காக தி.மு.க. தலைமையும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு பிற்பாதியில் தமிழக அரசியலில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.