Adani TNEB: அதானி குழுமம் மீதான லஞ்சப் புகார் தொடர்பான அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில், பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டு:
சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது. அதோடு, கௌதம் அதானி உடன் சேர்த்து சாகர் ஆர் அதானி மற்றும் வினீத் எஸ் ஜெயின் ஆகியோருக்கு, நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்டும் பிறப்பித்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழும பங்குகள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை கண்டுள்ளது.
ஊழலில் தமிழ்நாட்டிற்கு தொடர்பு?
இதனிடையே, அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, குற்றப்பத்திரிக்கையில் உள்ள 50வது பத்தியில், “இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 க்குள், ஒடிசா, ஜம்மு மற்றும் காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கான மின்சார விநியோக அமைப்புகள், உற்பத்தி இணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SECI) உடன் பொதுத்துறை கணக்கியல்தரநிலைகள் ( PSA) பிரிவில் நுழைந்தன. ஆந்திராவின் மின்சார விநியோக நிறுவனம் SECI உடன் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு அடுத்தபடியாக ஒரு PSA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதைத் தொடர்ந்து, எந்த இந்திய மாநிலம் அல்லது பிராந்தியத்தில் இல்லாத அளவிற்கு, ஏறக்குறைய ஏழு ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்குவதற்கு அம்மாநிலம் ஒப்புக்கொண்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி உடன் கைகோர்த்த திமுக?
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2021-22ம் ஆண்டு காலகட்டத்தில் தான், சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 6 ஆயிரத்து 201 மெகாவாட் சூரிய மின்சக்தியை வழங்க அதானி கிரீன் நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது. இதே காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டில் திமுக அரசும் பொறுப்பேற்றது. அப்போதே, மாற்று எரிசக்தி மீது கவனம் செலுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமயிலான அரசு அறிவித்து இருந்தது. அதைதொடர்ந்து, உற்பத்தி இணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு இணைந்து, சூரிய மின்சக்தியை கொள்முதல் செய்ய முன்வந்துள்ளது. இதனால், அதானி குழுமத்துடன் சூரிய மின்சக்தியை கொள்முதல் செய்ய, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது. மேலும், இதில் திமுகவிற்கு தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகமும் உருவானது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்:
இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் பரவி வருவதாகவும் கூறியுள்ளார்.