சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  சுமார் 250 ஊழியரகளுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளது. 


அதேபோல் சென்னை அருகே குரோம்பேட்டையில் எம்.ஐ.டியில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் 90% பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஐ.டியில் ஏற்கெனவே 81 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இப்போது மொத்த பாதிப்பு 141 ஆக உயர்ந்துள்ளது. 


 






தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்து வருகிறது. குறிப்பாக தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் வழிபாட்டு தளங்கள் ஆகியவை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 






தமிழ்நாட்டில் நேற்று 1,28,736 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,983 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 3,759 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 721பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது. இதன்காரணமாக சென்னையில் அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க: ”எனக்கு முழங்கால் வலி நல்லா குறைஞ்சுபோச்சு..” 10 மாதங்களில் 11 முறை தடுப்பூசிபோட்ட முதியவர்..