2019 ஆம் ஆண்டு இறுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தபோது ஒரு புது வைரஸ் நம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு, விரைவாக உலகம் முழுவதும் பரவியது, இதன் விளைவாக கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் கோவிட்-19 வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மக்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களை, குடும்பத்தினரை காண முடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும், மக்களுக்கு மத்தியில் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் விரக்தி போன்ற உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்குத்தது.


4 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் எதிர்த்து போராடி வந்தாலும் கொரோனா தொற்று ஒழிந்தபாடு இல்லை. ஆனால் தாக்கத்தின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மாறுப்பட்ட கொரோனா வைரஸ் புதிதாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா நோய்த்தொற்றை உற்று கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. இந்த மாறுபாடுகள் டிசம்பர் மாதம் தோன்றுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முதன்முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், முதல் பாதிப்பு ஜனவரி 2020-ல்  அறிவிக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, டிசம்பர் 2021 இல், ஊரடங்கு திரும்பப்பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, ஒமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து 2022  ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய பெரிய மாறுபாடு எதுவும் வெளிவரவில்லை என்றாலும், BA.2 மற்றும் BA.5 போன்ற துணை வகைகளின் பரவல் கண்டறியப்பட்டது. இவை இரண்டும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் கிளையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாவின் திரிபான ஜே.என்.1 வகை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய தொற்று இந்தியாவிலும் தலைதூக்கியுள்ளது. நேற்று வரை 263 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வகை மக்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றால் கூட இது கவனிக்கப்பட வேண்டிய திரிபு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த திரிபுகள் அனைத்தும் டிசம்பர் மாதத்தில் தான் கண்டறியப்பட்டுள்ளது என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குளிர் காலம், மழைக்காலம், வறண்ட குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதாக ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேச்சர் இதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆய்வில், உலகின் வடக்கு பகுதியில் உள்ள நாடுகளில் டெல்டா வகை கொரோனா  வெப்பநிலை குறைந்து வறண்ட குளிர்க்காலத்தில் அதிகமாக பரவியதை கண்டறிந்துள்ளது.  இதேபோல், சீனாவில் உள்ள சிச்சுவான் சர்வதேச பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கட்டுப்படுத்தப்பட்ட, வெப்பமான சூழலில் வசிப்பவர்களை விட குளிர்ந்த காலநிலையில் வசிப்பவர்களை கொரோனா வைரஸைப் அதிகமாக தாக்க வாய்ப்புகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.