சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைவாக இருந்த நிலையில், கடந்த மாதம் முதல் உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் ஆதிகரிக்கத் தொடங்கியது.


குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்ப நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் புதிய வகை தொற்று சரசரவென அதிகரித்தது. கொரோனா வைரஸ், உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இச்சூழலில்தான், நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஜேஎன் 1 வகை என்று கண்டறியப்பட்டுள்ளது. 


குறிப்பாக தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மற்றம் சண்டிகரில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4440 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 263 பேருக்கு புதிய வகை கொரோனா அதாவது ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அதன்படி கேரளாவில் 133 பேர், கோவாவில் 51 பேர், குஜராத்தில் 33 பேர், டெல்லியில் 16 பேர், கர்நாடகாவில் 8 பேர், மகாராஷ்டிராவில் 9 பேர், ராஜஸ்தானில் 5 பேர், தமிழ்நாட்டில் 4 பேர், தெலங்கானாவில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 263 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா உலக அளவில் வேகமாக பரவி வந்தாலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பு வேண்டும் என்றும் புதிய வகை கொரோனா பற்றிய தகவல்கள் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுவாச தொற்று, தொடர் இருமல், தொடர் காய்ச்சல் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.


இணை நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வரும்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று  தெரிவித்திருக்கிறது.  டெல்லியில் ஜேஎன் 1 கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. 


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 187 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 74 வயதுடைய முதியவர், இணை நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.