தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.


நாட்டில் கொரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசு கொரோனா தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதனால், சிறிது, சிறிதாக அந்ததந்த மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்து வருகிறது. இதனிடையே, இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்த போதிலும், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை இருப்பதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.


இந்நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 80%, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களின் 90 மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது . கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம் 97.2% ஆக அதிகரித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்வோர் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதியில்லை. இப்படி இருந்தால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். இதுவரை கிடைத்த பலன் எல்லாம் தற்போதைய விதிமீறல்களால் அழிந்துவிடும்.


 









நாட்டில் கொரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு விகிதம் பதிவாகி வருகிறது” என்று கூறினார்.


 






மேலும், சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் 24 சதவீதம் பேர் முகக் கவசம் அணிவதில்லை எனத் தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 45 சதவீதம் பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை என்றும், 63 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை எனவும், 25 சதவீதம் பேர் பயணங்களின்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை எனவும் கூறியுள்ளது.