கர்நாடகாவில் ஒமிக்ரானுக்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் இருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழைப் பெற்ற பிறகு தப்பிவிட்டார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏர்போர்ட்டிலிருந்து தப்பிய 10 பயணிகளை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒமிக்ரான் வைரஸ் உலகம் எங்கும் பீதியை கிளப்பி வருகிறது. முதன் முதலில் உருமாறிய கொரோனா வகையைச் சேர்ந்த ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதனால் பல்வேறு நாடுகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் வீரியமிக்கது என்றும் அதிவிரைவில் பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி 373 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இதன் வேகம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்படுகிறது. தென் ஆப்பிரிக்காக, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒமிக்ரான் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. ஆனால் பயப்பட வேண்டாம் எனவும் இருவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே காணப்படுகிறது எனவும் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்தவர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒமிக்ரானுக்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்ட இருவரில் ஒருவர் தனியார் ஆய்வகத்தில் இருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழைப் பெற்ற பிறகு தப்பிவிட்டார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏர்போர்ட்டிலிருந்து தப்பிய 10 பயணிகளை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் கூறுகையில், “இன்று இரவுக்குள் காணாமல் போனதாகக் கூறப்படும் 10 பேரையும் கண்டுபிடித்து, அவர்களுக்குச் சோதனை நடத்த வேண்டும். அவர்களின் அறிக்கை வெளியாகும் வரை பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 66 வயதான நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அவருடன் பயணித்த 57 பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். காணமல் போன 10 பேரின் தொலைபேசி எண்கள் ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து நவம்பர் 20 ஆம் தேதி வந்த ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர் ஏழு நாட்களுக்குப் பிறகு துபாய்க்குப் புறப்பட்டார். நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். அந்த நபர் தப்பியோடிய ஷாங்கிரி-லா ஹோட்டலில் என்ன தவறு நடந்தது என்பதை அவர்கள் விசாரணை நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட அந்த நபர் ஹோட்டலுக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. ஆனால் அவர் வரும்பொது கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்திருந்தார். நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் அவர் ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாங்கியுள்ளார். தொடர்ந்து 27 ஆம் தேதி நள்ளிரவு ஹோட்டலை செக் அவுட் செய்துவிட்டு விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டுள்ளார்.