ஓமைக்ரான் உருமாறிய கொரோனா, நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்தியர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா வகை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. ஓமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதனால் உலகின் பல நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குப் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த உருமாறிய கொரோனா வகையை நமக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக நாம் பார்க்க வேண்டும் என்றும் இந்தியாவில் நாம் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை தான் இது என்றும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அவர், "மாஸ்க்குகளை நாம் கண்டிப்பாகத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மாஸ்க்குகள் தான் நமது பாக்கெட்டிலேயே உள்ள தடுப்பூசிகள். வீடு அல்லது அரங்குகளில் இருக்கும் போது மாஸ்க்குகள் பெரியளவில் பயன் தரும். பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது, பொது இடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பது, மரபணு வரிசைப்படுத்துதலை அதிகரிப்பது, கேஸ்கள் அதிகரிக்கின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பது ஆகியவை ஓமைக்ரான் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள். இந்த ஓமைக்ரான் உருமாறிய கொரோனா டெல்டா வகையைக் காட்டிலும் வேகமாகப் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம். இது குறித்து வரும் காலங்களில் தான் நமக்குத் தெளிவாகத் தெரியும். இந்த புதிய உருமாறிய கொரோனா வகை குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள நமக்கு இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை. அப்போது தான் இந்த உருமாறிய கொரோனா குறித்து நம்மால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். தற்போதைய சூழலில் வேக்சின் பணிகளுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பொது இடங்களில் கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும். ஓமைக்ரான் உருமாறிய கொரோனா பெரியளவில் மாற்றங்களைக் கொண்டுள்ளது. எனவே, இது ஆபத்தானதாக இருக்கலாம். அதே சமயம் இதற்கு வேக்சின்களில் இருந்து தப்பும் ஆற்றல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு." என்று கூறினார்.
உருமாறிய கொரோனா வைரசின் தீவிரம் குறித்து பேசிய அவர் "Genome sequencing எனப்படும் மரபணு வரிசைப்படுத்துதல் மூலமே உருமாறிய கொரோனா வகைகளை நம்மால் கண்டறிய முடியும். கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் மரபணு வரிசைப்படுத்துதல் மிக மிக முக்கியமானது. சில நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. கடந்த காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நமக்குப் பெரியளவில் பயன் தரவில்லை. எனவே, இதுபோன்ற பயணத் தடைகள் தற்காலிகமாக இருக்க வேண்டும். இந்த முடிவுகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமைக்ரான் வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இது தனது புரோத ஸ்பைக்கில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளைக் கொண்டிருப்பதால் இது அதிக ஆபத்தானதாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏனென்றால் இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் எதிலும் இந்தளவு மாறுபாடுகள் இருந்ததில்லை. இதையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்தன. சில நாடுகளின் பங்குச்சந்தையும் சரிவைக் காணத் தொடங்கின.