கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும் என இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வில் உறுதியாகியுள்ளது.


உலக சுகாதார அமைப்பும் சரி, இந்திய சுகாதார அமைச்சகமும் சரி இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 3 மாதங்களுக்குப் பின்னர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றே இதுவரை வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் ஊசியே போதுமானது என்று பரிந்துரைக்கிறது. மேலும், இதன்மூலம் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் தடுப்பூசியை திறம்பட அனைவருக்கும் கொண்டு சேர்க்க முடியும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.


India Corona Cases today: அடுத்தடுத்து சரிவு... தங்கமல்ல... ஆறுதல் தரும் கொரோனா எண்ணிக்கை!


இதுதொடர்பான முதல் ஆய்வு, ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தி இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்டீஷியஸ் டிசீஸ் இதழில் பிரசுரிக்கப்பட்டது. இதற்காக, 280 மருத்துவ முன்களப் பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இரண்டாம் குழுவில் கொரோனா பாதிக்காதவர்கள் என பிரிக்கப்பட்டனர். இரண்டு குழுவினருக்குமே 28 நாள் இடைவெளியில் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. சோதனைக்கு முன்னரும், பின்பும் ரத்தமாதிரிகள் சேமிக்கப்பட்டன. 4 வாரங்களுக்குப் பின்னர், அனைத்து ரத்த மாதிரிகளையும் சோதித்ததில், கொரோனாவல் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மத்தியில் முதல் டோஸ் தடுப்பூசிக்குப் பின்னரே 1000 யூனிட் ஆன்ட்டிபாடிக்கள் உருவாகிவிட்டன. டிசெல், பிசெல் செயல்பாடும் இவற்றில் சிறப்பாக இருந்தது. 




அதேபோல், பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 20 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதிலும் பாதி பேர் தொற்று பாதித்து மீண்டவர்கள். பாதி பேர் தொற்று பாதிக்கப்படாதவர்கள். தொற்று பாதித்தோர் குழுவில், தடுப்பூசி செலுத்தப்பட்டதிலிருந்து முதலாம் மற்றும் இரண்டாம் வாரத்திலேயே ஆன்ட்டிபாடிக்கள் உருவாகிவிட்டன. அதேவேளையில் தொற்று ஏற்படாதோர் குழுவில் மூன்று அல்லது 4வது வாரத்தில் தான் ஆன்ட்டிபாடிக்கள் உருவாகின.


ஆகையால், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசிக்குப் பின்னரே 400 லிட்டர் அளவு ஆண்ட்டிபாடிக்கள் உருவாகின்றன என்பது விஞ்ஞானப்பூர்வமாக உறுதியாகியுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஞானேஸ்வர் சூபே தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு ஆய்வுகளின் அடிப்படையில், கொரோனா பாதித்தோருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கினால், அது நிச்சயமாக  தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு கணிசமான அளவில் தீர்வு தரும் என்பதில் ஐயமில்லை.


இதற்கிடையில், இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று கடந்த 75 நாட்களுக்கு பிறகு 60,471 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 9,13,378 ஆகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tamil Nadu Coronavirus LIVE News : 38 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை