சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் அவதிப்பட்டு வந்த உலகம் தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது.
தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பால் சீன மக்கள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தினசரி பாதிப்பு சுமார் 30,000 கடந்து பதிவாகியுள்ளது. சீன அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வந்தனர். ஷாங்காயில் போலீசுக்கு எதிராக மக்கள் போராடி வந்த நிலையில், பிஜீங் நகரத்திலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குவாங்டங், செங்ஷோ, லாசா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் வலுக்கும் நிலையில் சீன அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
இது ஒரு புறமிருக்க முக்கிய சீன நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தடுப்பூசியால் வரும் பக்க விளைவுகளை சந்திக்க தயாராக இல்லை என்றும் கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். குறிப்பாக மூத்த குடிமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சமூக வளைத்தளங்களில் பலரும் தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் மக்களின் போராட்டம் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் தளர்த்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றி இது போன்ற கருத்துக்களால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.
சீனாவின் பிரதான பகுதிகளில் இந்த தயக்கம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், இதனால் பீஜிங் போன்ற நகரில் zero covid policy தளர்த்திய நிலையில் தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என இதுவரை சீன அரசாங்கம் அறிவிக்கவில்லை.
சீனாவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர், வு ஜுன்யூ, இந்த குளிர்காலத்தில் மட்டும் மூன்று அலைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், தற்போது இருப்பது முதல் அலை தான் என்றும் கூறினார். மேலும் சந்திர புத்தாண்டு (lunar newyear) முன்னிட்டி அதிகப்படியான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணம் மேற்கொள்வதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) சீனாவின் கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகளை திடீரென நீக்குவதால், 2023 ஆம் ஆண்டுக்குள் கொரோனாதொற்று அதிகம் பரவும் எனவும் இறப்பு எண்ணிக்கை 10லட்சத்தை கடக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனவால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 3,22,000 ஐ கடக்கும் என கூறப்பட்டுள்ளது. பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் எந்த அதிகாரப்பூர்வ இறப்புகள் அறிவிக்கவில்லை.