தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) சட்டசபையில், புதிய கொரோனா வேரியன்ட் குறித்து பீதி அடையத் தேவையில்லை என்றும், இது உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றும் மேலும் இதுவரை எந்த நோயாளியும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.


வேகமாக பரவும் கொரோனா


சமீபத்தில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் 95% மாதிரிகளில், ஒமிக்ரான் வேரியன்ட் - BA2A, XBB மற்றும் அவற்றின் துணை வேரியன்ட்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். இந்த வேரியன்ட் வேகமாக பரவுகிறது, ஆனால் லேசான மற்றும் குறைவான ஆபத்தானதாக கருதப்படுகிறது. சமீப காலமாக மீண்டும் உயர்ந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த வேரியன்ட் வேகமாக பரவும் என்று ஆய்வுகள் கூறுவதலும், இதனால் உலகம் மீண்டும் பாதிக்கப்படும் அச்சுறுத்தல்கள் இருப்பதாலும் பலர் இயல்பு நிலை பாதிக்கப்படும் அச்சத்தில் உள்ளனர். 



சட்டசபையில் அமைச்சர் பதில்


எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த அமைச்சர், தனிநபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டம் கூட்டமாக பாதிக்கப்படும் க்ளஸ்டர்கள் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், தொற்று லேசானதாகவும் இருப்பதால், தீவிரமான பாதிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 5,872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5 இறப்புகளுடன் 2,099 பேர் தொற்று பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: விஜய்யின் மாஸ்டர் பிளான் என்ன? அம்பேத்கர் சிலைக்கு மாலை.. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை.. பரபரப்பாகும் அரசியல் களம்..!


நிதி உதவிக்காக கொரோனா இறப்பாக கணக்கில் கொள்ளப்பட்டது


சமீபத்திய கோரோனா தொற்று பாதிப்புகள் உயர்வின்போது ஐந்து பேர் இறந்தது "தற்செயலானது" என்றும் மா சுப்பிரமணியன் கூறினார். "குடும்பங்கள் நிதி உதவியை பெறமுடியும் என்பதால், அவர்கள் கோவிட்-19 இறப்பு பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டனர். தினசரி புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500 அல்லது 1,000 ஆக இருந்தால் மட்டுமே, திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கூட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படும்," என்று அவர் கூறினார்.



மாஸ்க் கட்டாயம்


இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களில் நோயாளிகளுடன் பழகும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மற்றும் அதைச் சார்ந்த மாணவர்கள் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆட்சிப் பொறுப்பேற்ற போது, 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்ததாகவும், தற்போது 2,067 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன், மருந்துகள், படுக்கைகள் மற்றும் வாகனங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர்கள் போலி கோவிட்-19 பயிற்சிகளை நடத்தி வருகின்றனர், என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.