மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடிக் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள திருக்கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8-ஆம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பூஜைகள் மட்டும் கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மீனாட்சி சுந்தேரஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், சுந்தராஜ பெருமாள் திருக்கோயில், பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதே போல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெளி வீதிகள், மாசி வீதிகள், சித்திரை வீதிகள், கோரியப்பாளையம், அரசரடி, காளவாசல் பைபாஸ் ரோடு, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் எதிர்வரும் திருவிழா நாட்களில் ஜவுளிக்கடைகள், பேரங்காடிகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. எனவே அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும். முகக்கவசம் அணியாதவர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. மேற்படி அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுத்து வணிக நிறுவனம் மூடி முத்திரையிடப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.