திருச்சி மாவட்டத்தில் கொரானா இரண்டாவது அலை தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கையும் , இறப்பு விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. இவற்றை கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, தடுப்பூசி செலுத்தி கொள்வது, என பல்வேறு கட்ட விழிப்புணர்வை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஏற்படுத்தியதின் மூலமாக தொற்றின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. ஆகையால் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது. இந்த நிலையில் மக்கள் தளர்வுகளை தவறாக பயன்படுத்தியதால் தற்போது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள்,குறிப்பாக கோயில்கள், கடை வீதிகளில், மக்கள் அதிகளவில் கூட்டமாக இருப்பதை காணமுடிகிறது. அதேசமயம் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவது இல்லை என்பது வேதனை அளிக்கிறது இதனால் தான் கொரானா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்சி மககள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்டமாக செல்வதும், சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக் கவசங்கள் அணியாமல்,என அலட்சியப் போக்கில் இருப்பது, தான் தொற்று அதிகமாக காரணம். மேலும் ஆடிக் கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு, ஆகிய பண்டிகை நாட்களில் மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடினால் கொரானா வைரஸ் அதிக தீவிரமாக பரவும். ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,வயலூர் அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவானைக்கோவில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், மலைக்கோட்டை வளாகக் கோயில்கள், மற்றும் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் ,ஆகிய கோவில்களில் நடைபெறும் நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 8.8 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளபட்டுள்ளது, என்றார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்கள், சிறிய , பெரிய கடைகள், காய்கறி, பழ, சந்தைகள் என அனைத்து இடங்களையும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் கொரானா மூன்றாவது அலையில் கேரளாவில் அதிகமாக மக்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். ஆகையால் தமிழகத்தில் மீண்டும் கொரானா பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு கூறிய விதிமுறைகளை அனைத்தையும் மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும், குறிப்பாக அனைவரும் கட்டாயமாக முக கவசம், சமூக இடைவெளி, பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.