செக்ஸ் வாழ்க்கை பாதிக்குமா..?
நாட்பட்ட கொரோனா தொற்று உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய ஆய்வின்படி, நாட்பட்ட கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் "தொடர்ச்சியான வாசனை இழப்பை அனுபவிக்கின்றனர், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு நோயாளிகள் சுவை இழப்பை எதிர்கொள்கின்றனர்" எனக் கண்டறியப்பட்டுள்ளது
இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் (UEA) ஆராய்ச்சியாளர்கள் குழு நாட்பட்ட கொரோனா நோய் பரவுவதையும், குறிப்பாக காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான வாசனை இழப்பு மற்றும் பரோஸ்மியா போன்ற அறிகுறிகளையும் ஆராய்ந்துள்ளது. அங்கு மக்கள் விசித்திரமான மற்றும் விநோதமான வாசனை சிதைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாட்பட்ட கொரோனா:
கிழக்கு ஆங்கிலியாவின் நார்விச் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கார்ல் பில்பாட் கூறுகையில், "நாட்பட்ட கொரோனா என்பது ஒரு சிக்கலான நிலையாகும், இது கொரோனா நோயின் போது அல்லது அதற்குப் பிறகு உருவாகிறது, மேலும் அறிகுறிகள் 12 வாரங்களுக்கு மேல் தொடரும் போது இது நாட்பட்டதாக வகைப்படுத்தப்படுகிறது."
"இதற்கான அறிகுறிகள் தலைவலி, மயால்ஜியா, சோர்வு, சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகும் மூளை சிலநேரம் சிந்திக்கும் திறனற்றுப் போதல் மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவற்றுடன் பரோஸ்மியா உள்ளிட்ட அறிகுறிகளும் பல மாதங்கள் நீடிக்கும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக,
சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கொரோனா நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தை தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, "கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.