INSACOG தரவுகளின்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பரவுதலுக்கு காரணமான COVID-19 இன் XBB 1.5 ஸ்ட்ரெய்னின் ஒரு புதிய தொற்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் மொத்தம் XBB 1.5 ஸ்ட்ரெய்னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எட்டாக உயர்ந்துள்ளது.
இந்திய SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) படி, குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஒருவருக்கும் இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்டில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. Omicron XBB மாறுபாடு, Omicron BA.2.10.1 மற்றும் BA.2.75 துணை வகைகளின் மறு இணைப்பாகும், இது XBB.1.5 மாறுபாடுடன் தொடர்புடையது.
அமெரிக்காவில், XBB மற்றும் XBB.1.5 மாறுபாடால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை மொத்த பாதிப்பில் 44% ஆக பதிவாகியுள்ளது. INSACOG தரவின்படி BF.7 மாறுபாட்டால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் துணை-மாறுபாடு BF.7னால் மேற்கு வங்கத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குஜராத் மற்றும் ஹரியானாவில் தலா இரண்டு பேரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
INSACOG நாடு முழுவதும் SARS-CoV-2 மரபணு கண்காணிப்பை, செண்டினல் இடங்கள் மற்றும் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் மாதிரிகளின் வரிசைமுறையைப் பயன்படுத்தி அறிக்கை தயார் செய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்தம் 4,46,80,094 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,371 ஆகக் குறைந்துள்ளது எனவும், இறப்பு எண்ணிக்கை 530,721 ஆக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத்துரையின் கூற்றுப்படி, நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 0.01% ஆகவும், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 98.80% ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் 223 பேரும், கேரளாவில் 1,369 பேரும், மகாராஷ்டிரா 125, ஒடிசா 91 பேருக்கும், ராஜஸ்தான் 68 பேருக்கும், தமிழ்நாடு 65 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 26 பேருக்கும், மற்றும் மேற்கு வங்கத்தில் 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 85,282 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை, கோவிட் நோய்த்தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தனிநபர்களுக்கு 220.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 10,336 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வரும் நிலையில் PIB தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வகை கொரோனா வைரஸ் மூளையை தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி போலியானது. இது போன்ற எந்த ஆய்வுகளும் இல்லை. இதை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.