இந்தியாவில் XE வேரியன்ட் கொரோனா பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என புதுப்புது வேரியன்ட்களாக உருமாறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலைக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் பாதிப்புகள் குறைந்து கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமல்ல, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமல்ல என்பன போன்ற தளர்வுகள் அமலாகியுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நமது நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன. எனினும் சீனாவின் சில முக்கிய நகரங்களில் தொற்று பரவல் மீண்டும் காணப்படுவதாக வெளியான தகவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தியது. இதனிடையே இங்கிலாந்தில் முதல் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற புதிய வகை வேரியன்ட் மும்பையில் ஒரு நோயாளிக்கு கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வேரியன்ட் உலக நாடுகளுக்கு அடுத்த அச்சறுத்தலாக இருக்கும் என்று தெரிகிறது.
இதனிடையே பல நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் அனைத்து பயண விதிகள் தளர்த்தப்பட்டு அவற்றின் எல்லைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து உலக நாடுகளிடையே வழக்கம் போல விமான சேவைகள் துவக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மும்பைக்கு தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த பெண் ஒருவருக்குதான் இந்த XE கொரோனா ஏற்பட்டுள்ளது என்பதுதான் மும்பை மாநகராட்சி தரப்பு வாதம். அந்த பெண்ணுக்கு 50 வயது ஆகிறது. இணை நோய்கள் இல்லை. மும்பைக்கு வந்ததும் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதன் ரிசல்ட் நெகட்டிவ். அவருக்கு ஏற்கனவே வேக்சிங் இரண்டு டோஸ் போடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மீண்டும் அலுவலகம் செல்லும் முன் டெஸ்ட் எடுக்க சொல்லியதால் டெஸ்ட் எடுத்து இருக்கிறார். அந்த டெஸ்டில் அவருக்கு பாசிட்டிவ் வந்து இருக்கிறது. அதில் XE கொரோனா என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்தியாவின் ஜீனோம் கூட்டமைப்பு இதை மறுத்துள்ளது. அவரின் ஜீனோம் சோதனையில் அப்படி எந்த முடிவும் வரவில்லை என்று கூறியுள்ளது.
ஜனவரி 19-ம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கொரோனா வேரியன்ட் கண்டறியப்பட்டது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய வேரியன்ட்களை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் 4-வது அலை உருவாகக் கூடும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், "மும்பையில் கொரோனா வைரஸின் XE வேரியன்ட் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை சுகாதார வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இதில், மும்பையில் கண்டறியப்பட்டது XE வேரியன் கொரோனா பாதிப்பு அல்ல என்று தெரியவந்துள்ளது. XE வேரியன்டால் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறப்பட்டவர் கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸையும் செலுத்தியுள்ளார். 50 வயதாகும் அவருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் ஏதும் இல்லை. அவர் கடந்த பிப்ரவரி 10-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அதற்கு முன்பாக அவர் வேறு நாடுகள் எதற்கும் செல்லவில்லை. இந்தியாவின் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை பரிசோதனை செய்ததில் முடிவுகள் நெகடிவாக வந்தன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.