கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் முககவசம் அணியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடைசியாக பிரிக்கப்பட்ட 38 ஆவது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 26 ஆயிரத்து 496 பேர் பாதிப்புக்குள்ளாகி அதில் 26 ஆயிரத்து 166 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்றுடன் 31 நாட்களாக மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை, மேலும் கடந்த 31 நாட்களாக சிகிச்சையில் ஒருவரும் இல்லாததை அடுத்து மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து 31 ஆவது நாளாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 330 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் நாடுமுழுவதும் பல இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி செயல்பாட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 19 லட்சத்து 49 ஆயிரத்து 16 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசியும் 10 லட்சம் 91 ஆயிரத்து 689 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 50 ஆயிரத்து 242 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 7 ஆயிரத்து 85 பேருக்கு செலுத்தியுள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 6 ஆயிரத்து 862 பேரும், பெண்கள் 10 லட்சத்து 34 ஆயிரத்து 721 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 348 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் கோவாக்சின் 2 லட்சத்து 40 ஆயிரத்து 740 பேருக்கும், கோவிஷீல்ட் 16 லட்சத்து 81 ஆயிரத்து 8 பேருக்கும் போடப்பட்டுள்ளது.