நாட்டில் முதன்முறையாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வேளாண் ஆய்வு கழகம் ICAR (Indian Council of Agricultural Research) இந்தத் தடுபூசியை உருவாக்கியுள்ளது.


இந்தியாவும் கொரோனா தடுப்பூசியும்:


கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதல் கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் 2020 மார்ச்சில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்தது. மே மாதத்துக்குள் நாட்டை ஆட்டிப்படைத்தது. 2021 ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. கோவாக்சின், கோவிஷீல்டு என்று இரண்டு மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இப்போது 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடங்கி நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதல் இரண்டு அலைகளில் இந்தியாவை ஆட்டிப்படைத்த கொரோனாவால் மூன்றாம் அலையில் மேலோங்க முடியவில்லை. அது லேசாக தாக்கி கடந்து சென்றது. இப்போது மீண்டும் கொரோனா தொற்று அன்றாடம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, கேரளா, உபி, தமிழ்நாடு என கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் கூட உயிரிழப்புகள் அதிகமாகவில்லை. இந்தியாவில் ஜூலையில் கொரோனா 4வது அலை வரும் என சில அமைப்புகள் கணித்துக் கூறியிருந்தாலும் கூட இந்தியாவில் இதுவரை 195 கோடிக்கும் அதிகமான அளவு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் இனி பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என சுகாதாரத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.


விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி:


இந்நிலையில் தான், நாட்டில் முதன்முறையாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 


அனகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசி டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கோவிட் தொற்றுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படும், பெரும்பாலான கோவிட் தொற்று அனைத்திற்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும் எனவும் ஐசிஏஆர்(ICAR - Indian Council of Agricultural Research) கூறியுள்ளது. இந்த தடுப்பூசியை நாய், பூனை, சிங்கம், சிறுத்தை, எலி, முயல் என பல விலங்குகளுக்குச் செலுத்தலாம் எனத் தெரிகிறது. பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விஞ்ஞானிகள் தங்களின் தனித்துவமான திறமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நாட்டிலேயே முதல் விலங்குகளுக்கான கோவிட் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தற்சார்பு இந்தியா என்ற கனவை இவர்கள் நனவாக்கியுள்ளனர். தடுப்பூசிக்காக வெளிநாடுகளின் உதவியை நாம் சார்ந்திருக்க தேவையில்லை. இது மாபெரும் சாதனை என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.




 


இந்த தடுப்பூசியுடன் இரு பரிசோதனை கருவிகளையும் ஐசிஏஆர் நேற்று அறிமுகம் செய்தது. விலங்குகளிடம் காணப்படும் SARS-CoV-2, Surra என இரு நோய் தொற்றுகளை கண்டறியும் திறனை இந்த பரிசோதனை கருவிகள் மூலம் முறையே கண்டறியலாம்.


கொன்று குவிக்கப்பட்ட மிங்க்:


விலங்குகளிடமிருந்து கொரோனா உருமாறி அது மனிதர்களுக்குப் பரவினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த அவசரத்தை கருத்தில் கொண்டே இந்த தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் ஆரம்பித்தபோது டென்மார்க்கில் மிங்க் வகை கீரி உயிரினங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. எங்கே அவை உருமாறி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என அஞ்சி ஆயிரக்கணக்கான மிங்க் உயிரினங்கள் அழிக்கப்பட்டன. இவற்றை அந்த நாட்டினர் ஃபர் ஆடைகள் தயாரிக்க ரோமங்களை எடுக்க பண்ணைகளில் வளர்த்து வந்தனர்.


இந்நிலையில் இந்தியாவில் அனகோவாக்ஸ் (Anocovax) தடுப்பூசி தயாரிப்பு ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.