நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 49,701 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இருப்பினும், ஜூன் 25-ஆம் தேதி பாதிப்பை விட கடந்த 24 மணிநேரத்தில் 933 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2021, மே 10ம் தேதி 37,45,247 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 5,81,337 ஆகக் குறைந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 14,228 சரிந்துள்ளது. நாட்டில், தொடர்ந்து 45-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57,481 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தாண்டு இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து வயது வந்தோருக்கும், தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று பதிலளித்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "வரும் 2021 டிசம்பர் மாத இறுதிக்குள், ஐந்து தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 188 கோடி தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தனிநபர்களுக்கும் இரண்டு தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்படும்" எனத் தெரிவித்தது. அதன்படி, 50 கோடி கோவிஷீல்டு டோஸ்கள், 40 கோடி கோவாக்சின் டோஸ்கள், பயாலஜிக்கல்-இ தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திடமிருந்து 30 கோடி தடுப்பூசி டோஸ்கள், டிஎன்ஏ அடிப்படையில், ஜைடஸ் கேடிலா நிறுவனத்திடம் இருந்து 5 கோடி தடுப்பூசி டோஸ்கள், 10 கோடி ஸ்புட்னிக் டோஸ்கள் வாங்கப்பட இருக்கின்றன. வரும், ஜூலை மாதத்துக்குள் 51.6 கோடி டோஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
தற்போது பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் கோவாக்சின் , சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு தேசிய கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளது.
ஐதராபாத்தில் இயங்கும் பயாலஜிக்கல்-இ தடுப்பூசி நிறுவனம் தனது தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை நடத்தி வருகிறது. இதன், முதல் இரண்டு மருத்துவ பரிசோதனைகள் திருப்தியளிக்கும் வகையில் இருந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இன்னும் சில மாதங்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது எனவும், வரும் ஆகஸ்ட்- டிசம்பர் மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கென முன்பணமாக ரூ.1500 கோடியை சுகாதார அமைச்சகம், பயாலஜிக்கல்-இ நிறுவனத்திடம் அளிக்க இருக்கிறது.
டிஎன்ஏ அடிப்படையில், ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரிக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனைக்கு, இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் முன்னதாக அனுமதி அளித்துள்ளது. டிஎன்ஏ அடிப்படையில் கோவிட்-19 தடுப்பூசியை ஜைகோவிட் என்ற பெயரில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த பரிசோதித்து வருகிறது. இது இந்தியாவில் டிஎன்ஏ அடிப்படையில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசி.
சமீபத்திய தகவலின் படி, இந்தியாவில் 32 கோடிக்கும் (32,11,43,649) அதிகமான தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. 5 கோடிக்கும் அதிகமானோர் (5,48,32,451) பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசி டோஸ்களை போட்டுக்கொண்டுள்ளனர்.