நாட்டில் கொரோனா பாதிப்பது கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் 6,155 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 6,050-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று 6,155-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம்
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 6,155 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,253 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 5.63 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களின் வார விகிதம் 3.47 சதவிகிதமாக உள்ளது.
உயிரிழப்புகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 954-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 31,194-ஆக சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதுவரை, 92.18 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ஒத்திகை
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் பயன்பாடு மற்றும் விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகள் காரணமாக பெருந்தொற்று ஒரு வழியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. நாட்டில் தினசரி பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் பயிற்சி ஒத்திகை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
நாளை மறுநாள்
வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில், பயிற்சி ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல வாரங்களாகவே, சில மாநிலங்களில் கொரோனா சோதனை குறைவாக நடத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலைகளை ஒப்பிடும்போது தற்போதைய சோதனை அளவுகள் போதுமானதாக இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க