தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.




தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பொது மருத்துவத் துறையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் முடிந்து, அதனை மருத்துவமனை டீன் சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த வார்டில் 'சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற நவீன கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் உடல்நிலையை, மருத்துவர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும்.




மேலும், நோய் கிருமி தாக்கத்தை குறைக்கவும், நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இருந்து நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்களுக்கு 'அட்டெண்டர் பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வார்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.




மேலும், நோயாளிகளின் நிலை பற்றி உறவினர்களுக்கு எடுத்துக்கூறவும், மக்களுக்கான பொது சுகாதாரத்தை பற்றி எடுத்துரைக்கவும் தகவல் தொடர்பு சாதனம் (மைக், ஒலிபெருக்கி) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கான கவனிப்பும், பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட அரசின் செய்திகளையும், அறிவிப்புகளையும் எளிதாக செய்ய முடியும் என டீன் சிவக்குமார் தெரிவித்தார்.




இதனை தவிர அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசின் நெறிமுறையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.