கோவையில் இன்று 2236 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரேநாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருதிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. மே மாதத்தில் உச்சத்தை அடைந்த தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இன்று 2 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 2 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றைய தினத்தை விட 83 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 21 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 5057 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 759 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிகரித்த கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று 62 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1658 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், இது மற்ற மாவட்டங்களை விட அதிகமானதாகவே இருந்து வருகிறது.
இதேபோல கொரோனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றும் சென்னையை விட ஈரோட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 1390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 1990 பேர் குணமடைந்துள்ள நிலையில், 13 ஆயிரத்து 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 72 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 475-ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 897 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 ஆயிரத்து 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில், 579 பேர் குணமடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.