புதுச்சேரி கொரோனா மேலாண்மை குழுவின் அவசர ஆளுநர் கவர்னர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், கலெக்டர் வல்லவன், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா தலைமை அதிகாரி டாக்டர் ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுவை பிரதிநிதி சாய்ரா பானு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு படக்காட்சி மூலம் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து விளக்கினார்.




கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பாதுகாப்பு திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு பின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். வார இறுதி நாட்களில் போடப்படும் ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகாரிகள் எந்த நேரமும் ஆய்வு செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.




பொங்கல் விழா கொண்டாட தடையில்லை என்றாலும் காணும் பொங்கலன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இனி தடுப்பூசி தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு சென்றுதான் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அவசியம் மற்றும் அவசர காரணங்களுக்காக மட்டும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வரலாம். அவ்வாறு இல்லாத நிலையில் இணைய வழியாக ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக முறையான முன்பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு படுக்கை வசதி, பிராணவாயு, மருந்துகள், மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைக்கவேண்டும். புதுச்சேரியில் தடுப்பூசி போடுவதும் அதற்கான ஆவணத்தை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். சுகாதாத்துறையும் மற்ற அரசுத்துறைகளும் இணைந்து சூழ்நிலையை கூர்ந்து கவனிக்கவேண்டும் என ஆளுநர் தமிழிசை பேசினார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள்.... சொல்லியும் கேட்காததால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரி..!