மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (திங்களன்று) ஒரு நாளில் 3,641 புதிய கோவிட் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும், மொத்தம் உள்ள தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 20,219 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் உயரும் கொரோனா
சமீபகாலமாக மீண்டும் கொரோனா நோய்த் தொற்று புதிய வடிவங்களில் பரவத் துவங்கி இருக்கிறது. மீண்டும் பரவுவதால் மக்கள் அச்சத்தில் மீண்டும் மாஸ்க் அணியவும் தொடங்கி உள்ளனர். 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி பின்னர் 2020 ஆம் ஆண்டு உலகத்தை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று நோய் நான்காவது வருடமாக இன்னும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. பின்னர் தடுப்பூசி கண்டறியப்பட்டு, உலகெங்கும் அவசர கால நடவடிக்கையாக அனைவருக்கும் அளிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், கொரோனா வைரஸ் ஓமைக்ரான், எக்ஸ்.பி.பி.1.16 என தற்போது வெவ்வேறு வேரியண்டாக மாறி மாறி வந்து தாக்குகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருக்கின்றன.
எக்ஸ்.பி.பி.1.16 ஓமைக்ரான் வேரியன்ட்
இந்த நிலையில் சமீப காலமாக எக்ஸ்.பி.பி.1.16 ஓமைக்ரான் வேரியன்ட் வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் தினசரி தொற்று பாதிப்புகள் 3,824 ஆகவும், சனிக்கிழமை 3,095 ஆகவும் இருந்தது. இது திங்கட்கிழமை 3,641 ஆனது. இந்நிலையில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,75,135 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் கொரோனா தொற்று இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
220.66 கோடி தடுப்பூசி
அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கடந்த வாரத்தில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கோவிட்-19 க்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் ஜனவரி மாதம் விவதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருத்தப்பட்ட மருத்துவ வழிகாட்டுதல்கள்
"பாக்டீரியா தொற்றுக்கான மருத்துவ சந்தேகம் இல்லாவிட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தக்கூடாது. கோவிட்-19 மற்றும் பிற நோய்த்தொற்றுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிஸ்டமிக் கார்டிகோஸ்டீராய்டுகள் லேசான நோய்தொற்றுக்கு கொடுக்க வேண்டாம்" என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
"சுவாசிப்பதில் சிரமம், உயர்தர காய்ச்சல்/கடுமையான இருமல், குறிப்பாக 5 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடி மருத்துவ உதவியை நாடுங்கள். அதிக ஆபத்துள்ள அம்சங்களில் ஏதேனும் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பராமரிப்புக்குள் வைக்கப்பட வேண்டும்," என்று திருத்தப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் ஜனவரி மாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.