கொரோனா தொற்று தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதார துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில்  தினசரி தொற்று பாதிப்பு இன்று 186-ஆக  உயர்ந்துள்ளது. நேற்றைய முன் தினம் தினசரி தொற்று பாதிப்பு 172-ஆக பதிவானது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிகை 993 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 102 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 3,350 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகப்படியாக சென்னையில் 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக சென்னையில் 295 பேர் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டில் 22 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இறப்புகள் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கம், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்  அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.


தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 150-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது குறிப்பாக ஒமைக்ரான் உறுமாற்றமான XBB, BA2 வகை தொற்று அதிகமாக பரவி வருவதால் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் பெரும்பாலானோருக்கு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் கொரோனாவிற்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.