சீனப் பெருநகரமாம் வூஹானை மையப்புள்ளியாகக் கொண்டு 2019ஆம் வருடத்தின் அந்திம காலத்தில்  துவங்கிய கொள்ளை நோய் - கோவிட்-19. அதை உண்டாக்கும் வைரஸான சார்ஸ் கொரோனா வைரஸ் -2 எளிதில் பிறருக்குப் பரவும் தன்மையுடன் இருந்ததும் கூடவே பாதிக்கப்பட்ட நபர்களிடத்தில் அதிகமான மக்களுக்கு நியுமோனியா  நுரையீரல் தொற்றை ஏற்படுத்தி மரணங்களை ஏற்படுத்தும் தன்மையுடன் இருந்தது.


அந்த வைரஸுக்கு மனிதர்களிடையே இதற்கு முன்பு எதிர்ப்பு சக்தி ஏற்படாமல் இருந்தமையால் மனித சமுதாயத்துக்கு இது புதிய வைரஸ் என்பதால் நாவல் கொரோனா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. தற்போது அந்த வைரஸ் மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த திரிபுகளான ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்ட்டா, ஓமைக்ரான் வரை கடந்த இரண்டு வருடங்களாக நாம் பல அலைகளைச் சந்தித்து வருகிறோம்.


முதலில் உக்கிரமாகத் தோன்றிய அந்த வைரஸ் இந்த இரண்டு வருடங்களில் தன்னகத்தே பல உருமாற்றங்களை அடைந்து தனது உக்கிரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளது. கூடவே நாம் கண்டறிந்த தடுப்பூசிகளும் அந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை நம்மிடத்தே அதிகரித்திருக்கிறது. எனவே அந்த வைரஸ் இனியும் பொது சுகாதாரத்திற்கு பாதகம் அளித்திடாது என்ற நம்பிக்கைக்கு மனித சமுதாயம் வந்திருக்கிறது.


இந்நிலையில் வூஹான் பெருநகரத்தின் வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள் "நியோ கோவி" எனும் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கிறார்கள். இது நேற்றைய தினம் அனைத்து சமூக வளைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பாக வைரலாக இருந்தது.



அதனால் இந்த விசயம் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்தப் பதிவு. முதலில் நியோ கோவி என்பது நடப்பில் பரவி வரும் கோவிட் -19 பெருந்தொற்றுடன் தொடர்பில்லாத வைரஸாகும். இரண்டாவது நியோ கோவி என்பது நாவல் கொரோனா வைரஸின் உருமாற்றம் அன்று.  மாறாக அது  கடந்த தசாப்தத்தில் அரேபிய தீபகற்பத்திலும் ஒருங்கிணைந்த அரபு அமீரக நாடுகளிலும் பரவிய மெர்ஸ் கொரோனா வைரஸின் (MERS Cov) உருமாற்றமாக இருக்கலாம் என்று அப்போது அடையாளப்படுத்தப்பட்டது.


இந்த MERS CoV எனும் MIDDLE EAST RESPIRATORY SYNDROME CORONA VIRUS என்பது தீவிரமாக மனிதர்களிடையே பரவும் தன்மை அற்ற வைரஸாகும்.  மேலும் அது பரவித் தோற்றுவித்த மொத்த மரணங்களே ஆயிரத்துக்குள் தான் இருக்கும். எனினும் அது பாதித்த நபர்களுள் 30-40% பேர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியதால் பெருந்தொற்றாக உருமாறுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் நாம் பயந்தது போல் அது பெருந்தொற்றாக மாற்றம் அடையவில்லை.


தற்போது வூஹான் அறிவியலாளர்கள் பேசும் நியோகோவி என்பது அந்த மெர்ஸ் கோவியின் உருமாற்றமாக இருப்பதால் இதன் அச்சுறுத்தல் எப்படி இருக்கலாம் என்பதை அவர்கள் கணித்திருக்கிறார்களே அன்றி அவ்வாறு தான் நடக்கும் என்று அர்த்தமாகாது. மெர்ஸ் கோவி வைரஸ் சவுதி அரேபியாவில் உள்ள ஒட்டகங்களில் அடையாளம் காணப்பட்டது. கிட்டத்தட்ட அதே காலகட்டமான 2013இல் தென் ஆப்பிரிக்காவின் வவ்வால் இனங்களில் நியோ கோவி அடையாளம் காணப்பட்டது.



மெர்ஸ் கோவி ஒட்டகத்தில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது போல இந்த நியோ கோவியும் வவ்வால்களிடத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.  இதில் இன்னொரு செய்தியையும் நாம் அறிய வேண்டும். இன்று உலகில் வாழும் வவ்வால் இனங்கள் முதல் கோழி உள்ளிட்ட பறவை இனங்களாக இருந்தாலும் சரி.. பன்றி உள்ளிட்ட கால்நடைகளாக இருந்தாலும் சரி.. அவற்றினூடே பரவும் பல்வேறு கொரோனா வைரஸ்களும் இன்ப்ளூயன்சா வைரஸ்களும் இருக்கின்றன.


அந்த வைரஸ்களில் தொடர்ந்து உருமாற்றம் நடந்து வருகின்றன. அதில் சில உருமாற்றங்கள் அவற்றை மனிதர்களிடையே பரவும் தன்மையுடன் மாறுகின்றன. ஆனால் இவ்வாறு இனம் விட்டு இனம் தாவி மனிதர்களிடையே பரவும் வாய்ப்பைப் பெறும் அத்தனை வைரஸ்களும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பெருந்தொற்றாக மாறுகின்றனவா என்றால் இல்லை.


இந்த நியோ கோவியைப் பொருத்தவரை இதுவரை இந்த வைரஸ் மனிதர்களிடையில் பரவியதற்கு சான்றேதும் இல்லை. மனிதர்களிடையே பரவாததால் அதன் மரணம் உண்டாக்கும் தீவிரம் குறித்து இப்போதே கணிப்பது தவறு.  அது வீண் பீதியை தான் உண்டாக்கும். ஏற்கனவே பலரிடம் பீதியை உண்டாக்கயிருக்கிறது. அந்த பீதி தேவையில்லை. அடுத்து இந்த நியோ கோவி குறித்து இன்னும் மேலதிகமாக செய்த ஆய்வில் இந்த வைரஸானது மெர்ஸ்கோவியை விட்டும் சற்று நழுவி தற்போது பரவி வரும் சார்ஸ் கோவி2 போல நுரையீரலின் சுவாசப்பாதை செல்களான ஆஞ்சியோடென்சின் கண்வர்டிங் என்சைம் 2 ரிசப்டார்களை குறிவைக்கின்றன.


மெர்ஸ்கோவி டைபெப்டைடல் பெப்டிடேஸ் 4 (DPP4) எனும் நொதியை குறிவைத்தது. இந்த நியோ கோவி ACE2 வை குறிவைக்கிறது. இது ஆபத்தான போக்கு என்றும் இந்த வைரஸில் T510F என்ற இடத்தில் அங்கமாற்றம் ஏற்பட்டால் இது மனிதர்களிடையே பரவும் தன்மையைக் கொள்ளும் என்று கணித்துள்ளனர். உண்மையில் இது போன்று நிகழ்காலத்தில் விலங்குகளிடையே காணப்படும் பல வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து கொண்டே தான் வருகின்றன. அவற்றுள் எது எப்போது மனித இனத்திற்கு தாவும் என்பதை நாம் கணிக்கவே முடியாது.



மனிதன் இதுவரை கண்டறிந்து கூறியுள்ள மொத்த கொரோனா வைரஸ் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது.  எனவே நாம் அறியாத பல விசயங்கள் உள்ளன என்பதையும் நாம் உணர வேண்டும். நியோகோவி வைரஸில் மனிதர்களிடையே பரவுவதற்கு சாதகத்தை ஏற்படுத்தும் அந்த உருமாற்றம் நிகழ்வதற்கு எத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவோ அதே சாத்தியக்கூறுகள் அது மனிதர்களிடையே பலம் குன்றி வெளிப்படும் வாய்ப்பும் உள்ளன.


எனினும் அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மருத்துவ உலகம் விழிப்புடன் நோக்கி விலங்குகளிடையே பரவும் கொரோனா வைரஸ்கள் மற்றும் ப்ளூ வைரஸ்களின் ஆராய்ச்சியை இன்னும் மெருகேற்றிட வேண்டும். இது போன்ற முன்கணிப்புகள் இன்னும் இதுகுறித்த ஆய்வுகளை முன்னெடுக்க உதவும். மாறாக மக்கள் பீதியடையும் வண்ணம் காட்சி ஊடகங்கள் ஒளிபரப்புவதற்கன்று. வைரஸ்களால் பரவும் பெருந்தொற்றுகளில் எழுதப்படாத விதி ஒன்று உள்ளது.


வைரஸின் பரவும் வீரியம் அதிகமாக இருந்தால் அதன் மரணம் உண்டாக்கும் வீரியம் குறைவாக இருக்கும். வைரஸின் மரணம் உண்டாக்கும் வீரியம் அதிகமாக இருந்தால் கவலையே வேண்டாம் அது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் வீரியம் மிக மிக குறைவாகவே இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டு மெர்ஸ் கோவி இதுவரை நான்காயிரம் பேருக்கும் குறைவான நபர்களிடமே தொற்றை ஏற்படுத்தி அவர்களுள் 800+ மரணங்களை ஏற்படுத்தியது. பரவும் வேகம் மிகக் குறைவு.



அதனால் பெருந்தொற்றாக உருவெடுக்க முடியவில்லை. ஆனால் மரண விகிதம் 30-40% வரும் தற்போது பரவி வரும் கோவிட்-19 வைரஸ் இதுவரை 37 கோடி பேருக்கு கண்டறியப்பட்டு 2% மரணங்களை  ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பரவும் வேகம் அதிகமாக உள்ள வைரஸ் தான் பெருந்தொற்றைப் பொருத்தவரை ஆபத்தானது என்பதை அறியலாம் .நான் இந்தப் பெருந்தொற்று வூஹானில் ஆரம்பிக்கும் போதே ஜனவரி 2020இல் எழுதிய வரிகளை  இப்போதும் கூறி இந்த பதிவை முடிக்கிறேன்.


காலையில் சென்னையில் பெட் காபி பருகி காலை சிற்றுண்டியை சிங்கப்பூரில் சாப்பிட்டு மதிய உணவிற்கு சீனா சென்று அங்கிருந்து இரவு உணவுக்கு ஜப்பான் செல்ல முடியும் இக்காலத்தில் தொற்றுப்பரவல் தவிர்க்கவே இயலாதது. கூடவே மக்கள் தொகை பெருக்கம்.. பெருநகரமயமாக்கல் போன்றவற்றாலும்


விரைவான போக்குவரத்தாலும் இதுபோன்ற தொற்றுகள் தரும் அச்சுறுத்தல் தசாப்தத்திற்கு ஒருமுறையேனும் ஏற்பட வாய்ப்பு உண்டு தான் . ஆனால் அதற்காக கண்டதையெல்லாம் பார்த்து அஞ்சி நடுங்கி கவலை கொள்ளத்தேவையில்லை. வருவதை வரும்போது  அறிவியல் துணையோடு எதிர்கொள்வோம். எதிர்காலத்தை நினைத்து அதிகமாக வருந்தி  நிகழ்காலத்தை தொலைத்திட வேண்டாம். தற்போதைக்கு நாம் இந்தப் பெருந்தொற்றை வென்று வாகை சூடும் நிலையில் இருக்கிறோம். எதிர்காலம் குறித்த எச்சரிக்கை போதும். பீதி வேண்டாம். அனைவரும்  மகிழ்ச்சியுடன் என்றும் வாழப் பிரார்த்தித்து இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்