தற்போது புதிதாக எதிரொலிக்கும் ஒரு வைரஸ் பெயர் நியோ கோவ் (NeoCov) ."தற்போது வவ்வால்களிடம் இந்த வகை கொரோனா வைரஸ் காணப்படுகிறது. இந்த வைரஸில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால்கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இதுவரை பரவிய எல்லா கொரோனா வைரஸ்களையும் விட அந்தப் புதிய கொரோனா வைரஸ் பயங்கரமானது. அபாயகரமான ஆட்கொல்லி வைரஸ். அது தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் இறந்துவிடுவார்கள்’’ என்று எச்சரிக்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அப்படிப்பட்ட பயங்கரமாக வர்ணிக்கப்படுவது, நியோ கோவ்
கொரோனா முதன்முதலில் தோன்றிய சீனாவின் வூஹான் நகரிலிருந்து இந்த எச்சரிக்கை வந்திருப்பதால், உலகமே திகிலில் மூழ்கிக் கிடக்கிறது. ஆனால், ‘இது இன்னும் மனிதர்களைத் தொற்றவில்லை, மனிதர்களுக்கு தொற்றும் வேரியன்ட்டாக மாறவும் இல்லை’ என்ற ஆறுதல் செய்திகள் கிடைத்துள்ளன. கொரோனாவின் சாஃப்ட் வெர்ஷனான ஒமைக்ரான் வேரியன்ட் வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் கொரோனா மீதான அச்சம் உலகம் முழுக்க மெல்ல விலகியிருக்கிறது. ஆனால் நேற்று வந்த இந்த பகீர் செய்தி எல்லோரையும் மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. "இது ஒரு அலை வந்தால் பலர் இல்லாமல் போகும் வாய்புள்ளது" என்று பரபரப்பாக பெடிக்கொள்ளப்படும் இந்த வைரஸ் வளைகுடா நாடுகளில் கடந்த 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பரவிய `மெர்ஸ்' என்ற வைரஸ் நோய் போன்ற அதே அம்சங்களை கொண்டுள்ளது. கிட்டத்தட்ட கொரோனா போன்ற குணங்கள் கொண்ட ‘மெர்ஸ்-கோவ்’ (MERS-CoV) என்ற வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் அது. கொரோனா போலவே இதுவும் வௌவால்களில் இருந்த வைரஸ் தான். வௌவால்களிலிருந்து ஒட்டகங்களுக்குப் பரவி எப்படியோ ஒரு கட்டத்தில் மனிதர்களை வந்து அடைந்துவிட்டது. மெர்ஸ் நோயை உண்டாக்கிய வைரஸுக்கு வேகமாகத் தொற்றும் தன்மை இல்லை. அதனால் சில நாடுகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பரவி, அப்படியே காணாமல் போய்விட்டது. ஆனாலும், அது தொற்றியவர்களில் மூன்றில் ஒருவர் மரணமடைந்தார்கள் என்னும் செய்தி உண்மை.
கடந்த 1920-களில் விலங்குகள், பறவைகளிடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘சார்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. அதன்படி பார்த்தால் இந்த வைரஸும் ஆரம்பத்தில் உருவான வைரஸ்களும் ஒரே மாதிரியான குணநலன்களை பெற்றுள்ளதால், இவை உலகிற்கு புதிதல்ல என்று கூறப்படுகிறது. புதிய நியோகோவ் வைரஸ் குறித்த சீன விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை, உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "தென்னாப்பிரிக்காவில் வாழும் வவ்வால்களிடம் நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். மனிதர்களிடம் ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு விலங்குகள் தான் ஆதாரமாக இருக்கின்றன. கரோனா வைரஸ் எப்போதுமே விலங்குகளில் தான் இருந்து வருகின்றன. குறிப்பாக வவ்வால்கள். இந்நிலையில் சீனா பகிர்ந்துள்ள புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளோம். இந்தத் தகவலைப் பகிர்ந்தமைக்காக சீனாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்." இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த வைரஸ் விலங்குகள் மத்தியில் மட்டுமே பரவி வருகிறது. இப்போதைய வடிவில் இருக்கும் வரை இது மனிதர்களைத் தொற்றும் அபாயம் இல்லை. கொரோனா வைரஸ்கள் மனிதர்களுக்குப் பரவும் நேரத்தில், அதன் என்சைம்களில் சிலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு உருமாற்றம் இந்த நியோகோவ் வைரஸில் ஏற்பட்டால், அதன்பின் பேரழிவைத் தடுக்க முடியாது என்பதே சீன விஞ்ஞானிகளின் அச்சம். இவர்கள் கவலையுடன் குறிப்பிடும் இன்னொரு விஷயம், இப்போது உலகம் முழுக்க போடப்படும் கொரோனா தடுப்பூசிகள் எதுவுமே இந்த நியோகோவ் வைரஸிலிருந்து பாதுகாப்பு தராது. ஏனெனில், அது முற்றிலும் வேறு வடிவத்தில் இருக்கும் கொரோனா வைரஸ். இதுவரை மனிதர்களைத் தொற்றிய வைரஸ்களின் வரலாற்றைப் பார்த்தால், வேகமாகப் பரவும் வைரஸ்கள் ஆபத்தாக இருந்ததில்லை. மிக ஆபத்தான வைரஸ்கள் வேகமாகப் பரவியதில்லை. ‘‘இந்த வைரஸ் மனிதர்களைத் தொற்றும் தன்மையுடையதாக மாறுவதற்கு சாத்தியங்கள் குறைவு. அப்படி மாறினால், அது தன் வீரியத்தை இழந்திருக்கும்’’ என்றே உயிரியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதே வேளையில் இந்த வைரஸ் 2014லேயே பரவியதால் மனிதர்களுக்கு புதிய அறிமுகம் இல்லை என்றும், இது பழைய வைரஸ் என்றும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாது அதனால் மக்கள் தேவையில்லாத அச்சம் கொள்ளவேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 56 லட்சத்துக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது