கடலூரில் 500 ஐ கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு, கட்டுப்படுத்தபட்ட பகுதிகள் 17-ஆக உயர்வு, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது

 

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

 



 

 

 இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 494 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், நேற்று ஒரு நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது, அதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் பூஜ்ஜியமாக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தற்பொழுது 22 நாட்களில் கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதியில் பயின்ற 10 க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்களுக்கு கொரோனா உருதியானதால் செவிலியர் பயிற்சி விடுதி உட்பட மாவட்டத்தில் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது, இதில் விருத்தாசலம் பகுதியில் மட்டும் 6 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், தேவனாம்பட்டினம், முதுநகர், அண்ணாமலை நகர், சிதம்பரம், விருத்தாச்சலம், நெய்வேலி டவுன்ஷிப், திட்டக்குடி, பண்ருட்டி கலால்துறை, சேத்தியாதோப்பு, புத்தூர், குமராட்சி ஆகிய காவல் நிலையங்களில் 15 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவல் உள்ளதா என்பதனை பரிசோதனை செய்தனர். 

 



 

இதில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் மேற்கண்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த 15 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்கள் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா, என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர், என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

மேலும் கொரோனா தொற்று பாதிப்பு காவல் துறையினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது, கடலூர் மாவட்ட காவல் துறையினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கேட்டுக்கொண்டு உள்ளார்.




மத்திய அரசு, இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மொத்தமாக 160.58 கோடி தடுப்பூசி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ளுமாறு மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன