புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று அதிகமாக பரவக்கூடியதன்மை கொண்டதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம்  தெரிவித்தார். 


நேற்று, நடைபெற்ற உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செய்தியார்கள் சந்திப்பில் பேசிய அவர், "டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் அதிகமாக பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது. தற்போது, உலகளவில், 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக B.1.617.2 டெல்டா கொரோனா (டெல்டா), இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta),  பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது. 


"காலப்போக்கில், வைரஸ் தனது மரபணு அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தி தனது இருத்தலை உறுதிபடுத்தும். அது, இயற்கையான நிகழ்வுதான். நாங்கள் உருமாறிய டெல்டா நோய்த்தொற்று பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம் இது வேகமாக பரவி வருகிறது. தடுப்புச் சங்கிலியில் உடைப்பது மிக முக்கியம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று பரவல் அதிகமானால், மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மீது அழுத்தம் ஏற்படுத்தும். இது, கொரோனா இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும்" என்று தெரிவித்தார். 


கடந்தாண்டு, இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகையை ( B.1.1.7-Alpha) விட டெல்டா வகை கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்பக் குழுத் தலைவர் Maria Van Kerkhove தெரிவித்தார். மக்கள் அதிகம் கூடும் சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், மதம் தொடர்பான திருவிழாக்கள் ஆகியவை மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.


டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் என்றால் என்ன?


முன்னதாக, உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், உருமாற்றம் இல்லாத கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை 90% அதிகம் பரவக்கூடியவை என்றும், ஆல்பா வகை கொரோனா தொற்றுகள் 29% கூடுதலாக பரவக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டது.  


Delta Plus | டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு


 




இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில்,  வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கண்டறியப்படும் 90 விழுக்காடு கொரோனா பாதிப்புகள் புதிய உருமாறிய டெல்டா வகையால் ஏற்படும் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய (​ஈசிடிபிசி) இயக்குனர் Andrea Ammon தெரிவித்தார். கோடை காலங்களில் உருமாறிய டெல்டா வகை தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக,  தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செயல் திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது. கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் கடந்த ஆண்டு சந்தித்த கொரோனா இறப்பு அவலநிலையை மீண்டும் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.