கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கோவின் ஆப் அல்லது ஆரோக்கிய சேது செயலி உதவியுடன் தடுப்பூசிக்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். ஆனால் அதில் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற அடிப்படை விபரங்கள் தவறுதலாக உள்ளது என்ற குற்றச்சாட்டினைத்தொடர்ந்து, அதனை சரிசெய்யும் வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றின் பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. முதல் அலை, இரண்டாம் அலை என தற்போது அது டெல்டா ப்ளஸ் கொரோனாவாக வலம் வருகிறது. ஏற்கனவே இந்த பெருந்தொற்றிலிருந்து மக்களைக்காப்பதற்காக சீரம் நிறுவனத்தில் கோவிஷூல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய 3 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதனையடுத்து   தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் பெயர், ஆதார் எண், தடுப்பூசி செலுத்திக்கொண்ட தேதி , தடுப்பூசியின் பெயர், அடுத்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேதி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடம் ஆகிய தகவல்களை அடங்கிய சான்றிதழ்களை கோவின், உமாங், டிஜி லாக்கர் மற்றும் ஆரோக்கிய சேது ஆகிய செயலிகளின் வழியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ்களை  மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் உள்ளது. 


ஏற்கனவே பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தான் பணிக்கு வர வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மேற்கண்ட செயலிகளைப்பயன்படுத்தி தடுப்பூசிக்கான சான்றிதழ்களைப் பெறுகின்றனர். ஆனால் அதில் பிழைகள் இருப்பதாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தனர். இதனையடுத்து அரசு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு இதனை கோவின் இணையதளத்தின் உதவியோடு சரி செய்யும் வசதிகளையும் அறிமுகம் செய்துள்ளது.





குறிப்பாக கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பாக பதிவிறக்கம் செய்த சான்றிதழில் பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகிய மூன்றில் பிழை இருந்தால் மட்டுமே கோவின் இணையத்திற்கு சென்று தாமாகவே சரி செய்து கொள்ளலாம் எனவும், ஆனால் ஒரு முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலில் நாம் எப்படி தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும் என தெரிந்து கொள்வோம்.


முதலில், https://www.cowin.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று IN/Register என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணினைக்கொடுக்க வேண்டும். அந்த எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லினை (OTP) பதிவிட வேண்டும்.  இதனையடுத்து உங்களது பெயருக்கு கீழ் நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பின்னர் நீங்கள் சான்றிதழில் உள்ள உங்களது விபரங்கள் தவறுதலாக இருக்கும் பட்சத்தில், , https://www.cowin.gov.in/ இணையதளத்துக்கு சென்று IN/Register என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லினை (OTP) பதிவிட்டு அக்கவுண்ட்டுக்குள் செல்ல வேண்டும். பின்னர் Account Details section-இல்  இருக்கும் Raise an issue என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து  Choose the member name  ஆப்ஷனில் உங்களின் பெயரினைத்தேர்வு செய்த பிறகு Correction in the certificate என்ற ஆப்சனை கிளிக் செய்துகொள்ள வேண்டும். அதில் பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகிய 3 ஆப்ஷன்கள் இருக்கும். எனவே நீங்கள் பதிவிறக்கம் செய்த சான்றிதழில் பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகிய மூன்றில் ஏதேனும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை திருத்திக்கொள்ளலாம். ஆனால் இதனை ஒரே ஒரு முறை மட்டும் தான்  இணையதளப்பக்கத்திற்கு சென்று திருத்திக்கொள்ள முடியும் என்பதால் அனைவரும் கவனமுடம் பிழையினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.