ஒரே நாளில் 85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய சாதனை படைத்திருக்கிறது. மக்கள் தொகை நெருக்கம் அதிகமான இந்தியாவில் கொரோனாவை வெல்ல தடுப்பூசி செலுத்துவதே ஒரே ஆயுதம் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.


இந்நிலையில், ஜூலை 21 முதல் மூன்று வாரங்களுக்கு நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே மத்திய அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று இந்தப் புதிய திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. காலையிலேயே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களுக்கு அழைப்புவிடுத்தார். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 85 லட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஒரே நாளில் 43 லட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதே அதிகமான எண்ணிக்கையாக இருந்தது.


புதிய இலக்கு குறித்து பிரதமர் மோடி, "இன்றைய தடுப்பூசி இலக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா தடுப்பில் தடுப்பூசிதான் நமக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றிகள்" என்று பதிவிட்டிருந்தார்.






பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகம்..


அன்றாடம் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி என்ற இலக்குடன் தடுப்பூசித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் கைக்கொடுத்துள்ளன. இதனால், தடுப்பூசி திட்டத்துக்கு ஓர் அரசியல் சாயமும் விழுந்திருக்கிறது. அதிகாரிகள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசி அனுப்பிவைப்பது தொடங்கி ஒருங்கிணைப்பு வரை அதிக கவனம் செலுத்தினார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் பாஜக ஆளும் கர்நாடகாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பஞ்சாப், ஜார்க்கண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் நேற்றைய தினம் ஒரு லட்சத்துக்கும் குறைவானோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டது.


கடந்த ஜூன் 7-ஆம் தேதி பிரதமர் புதிய தடுப்பூசித் திட்டத்தை அறிவித்ததிலிருந்தே மத்திய அரசு அதிகாரிகள் தங்களின் பணியைத் தொடங்கினர். அனைத்து மாநில அரசுகளுடனும் அவர்கள் இணைந்து செயல்படத் தொடங்கினார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தியதாலேயே அங்கு அதிகமானோருக்கு தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.