இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முடுக்கி விடும் முயற்சியாக,கோர்பேவாக்ஸ், கோவோவாக்ஸ், மோல்னுபிரவீர் ஆகிய மூன்று தடுப்பு மருந்துகளின் அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளது.
கோவோவேக்ஸ் (Covovax):
இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து ''கோவோவேக்ஸ்'' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசி பாதுகாப்புடன் 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, உலக சுகாதாதார நிறுவனம் அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் உள்ள வெளிநாட்டு தடுப்பூசிகளை கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 13ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பல்வேறு ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்திய சீரம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோர்பேவாக்ஸ் (Corbevax):
இந்தியாவின் பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் இந்த தடுப்பூசிக்கு, கொரோனா சுரக்ஷா திட்டத்தின் கீழ் இதற்கு நிதியுதவி அளித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இன்று சோதனை அடிப்படையில் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
மோல்னுபிரவீர் தடுப்பு மருந்து (Molnupiravir):
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த மாத்திரியை 13 நிறுவனங்கள் உற்பத்தி செய்ய இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைக்கு அமெரிக்காவின் எப்டிஏ ஒப்புதல் வழங்கியது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவின் 23-வது கூட்டத்தில் பரிந்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்