தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புக்கு பள்ளிகளை திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டது, அதில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், ”அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தனர்.




இந்நிலையில் பள்ளி திறந்தது முதல் பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய் தொற்று உள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோய் தொற்று ஏற்பட்ட பள்ளிகளில் பிற மாணவர்களிடம் சோதனை செய்த போது வேறு சில மாணவர்களுக்கும் கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு பள்ளி முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூடுதலாக செய்யப்படுகிறது.




கோவையை பொறுத்தவரை எட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஒரு தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா தெரிவிக்கையில், ”சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு மட்டும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் எல்லா மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் நான்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி  அருகே உள்ள பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மாணவர்களுக்கு எவ்வாறு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என தகவல் வெளியாகவில்லை.




திருச்சியில் ரெட்டைவாய்க்கால் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு பள்ளி திறந்த அன்றே கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதனால் பள்ளி மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




புதுக்கோட்டை மாவட்டம் கரம்பங்குடி அருகே உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பள்ளி மாணவி பள்ளிக்கு, வரவில்லை. இருந்த போதிலும் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மேலும் சுகாதாரத்துறையினர் அப்பள்ளியின் தூய்மையை உறுதி செய்துவருகின்றனர். அதே போல் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் என தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மட்டும் 15 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*






அதே போல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் பள்ளி திறப்பிற்கு முன்பாகவே பள்ளிக்கு வரவில்லை. அதே போல் திருப்பூரில் நான்கு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதே போல் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 10 ஆசிரியர்களும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இதானால் தமிழ்நாட்டில் 15 பள்ளி மாணவர்களுக்கும், 6 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.