தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் உச்சத்தில் இருந்த நிலையில், முழு நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, பேருந்துகளுக்கு அனுமதி, கடைகள் மற்றும் வணிகவளாகங்கள் திறக்க அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.


கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.




இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கல்லூரியில் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த பிற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கேரளாவில் இருந்து வந்த 4 மாணவர்கள் மூலமாக கோவையில் உள்ள நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு நேற்று கோவையில் கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் கால்நடை மருத்துவ மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் சென்னை அளவிற்கு அதிகளவு பாதிப்பை கோவை மாவட்டமும் சந்தித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலா தளங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி, 1,658 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஆங்காங்கே உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : தமிழகத்தில் முதன்முறையாக 1100 ஆண்டுகள் முற்பட்ட அரிய சிவன் சிலை வாலாஜாபாத்தில் கண்டுபிடிப்பு