கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு, அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில், கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றை அவரவர் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.


இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிப்பதற்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அதாவது மூன்றாவது தடுப்பூசி செலுத்தவும் மருத்துவத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.




இதனடிப்படையில். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியிஜ் மூன்றாவது டோஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு தவணை டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர். தன்னார்வலர்களாக பங்கேற்கும் அவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் அளவு குறைந்தது ஒன்பது மாதம் நீடிக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிப்பதற்காக இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் எந்தளவிற்கு செயல்படுகிறது என்பதை மருத்துவர்கள் கண்காணிக்க உள்ளனர்.


இந்த பரிசோதனையில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்கள் ஏற்கனவே தடுப்பூசியின் இரண்டாவது டோசை மார்ச் மாதத்திலே செலுத்தியவர்கள் ஆவர். இவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால், தற்போது அவர்களுக்கு பூஸ்டர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.




தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலருக்கும் ஆண்ட்டிபாடிகள் நீடிக்கும்போது, சிலருக்கு தடுப்பூசியின் செயல்திறன் குறையலாம் என்றும், ஆன்டிபாடிகள் 6 முதல் 9 மாதங்களுக்கு பிறகு நீடிக்காது என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை கொண்டு இந்த பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்களது இரண்டாம் டோசை செலுத்திக்கொள்ள முப்பது நாட்கள் இடைவெளி மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.


ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்களது அடுத்த டோசை செலுத்துவதற்கு 90 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தவேண்டும் என்று அரசும், மருத்துவத்துறையினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். இந்தியாவில் சிலர் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு பதிலாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


TN Assembly: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா நிறைவேற்றம்