விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா சட்டசபையில் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதே சமயத்தில், ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தி.மு.க. அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எம்.ஏ.க்கள் அக்கட்சியின் எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். மேலும், சட்டப்பேரவை நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கத்திற்கு எதிரே உள்ள வாலாஜா சாலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த மசோதாவிற்கு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க.. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதே சமயத்தில், இந்த மசோதாவிற்கு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவின்படி, ஜெயலலிதா பல்கலைகழகம் என்பது ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பல்கலைகழக தகுதி நீக்கம் செய்யப்படும்.
பின்னர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட உள்ளது.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, இசை மற்றும் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு சூட்டப்பட்ட ஜெயலலிதாவின் பெயர் மாற்றப்படவில்லை. உயிருடன் இருக்கும்போது பெயர் வைக்கக்கூடாது என்ற விதி இருக்கும்போது அம்மா உணவகம் எப்படி வந்தது? பெயரை மாற்றுவது எங்கள் நோக்கம் இல்லை. கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலைஞரின் பெயரை நிக்கியது அ.தி.மு.க.தான். கலைஞர் தொலைக்காட்சி வழங்குவதை 10 ஆண்டுகள் எதற்காக நிறுத்தி வைத்தனர்?” இவ்வாறு அவர் பேசினார்.
கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். விழுப்புரத்தின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா பல்லைகழகம் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்கப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தனி நபராக தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.