தமிழ்நாட்டில் மேலும் 493 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் பதிவான நிலையில் நேற்றைய தினம் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அது 500-ஐ நெருங்குகிறது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 493 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 2,876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 301 பேர் கொரோனாக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் கடந்த 4 நாட்களாக கொரோனா காரணமாக உயிரிழப்புகள் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தமிழ்நாடு சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரபு நாட்டிலிருந்து வந்த 2 பேர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் ஆகிய நாட்டிலிருந்து வந்த 3 பேர் என மொத்தம் 5 வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  5,788 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில் 493 மாதிரிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 3000 ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 36,01,199 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 132 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 829 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொற்று பரவும் சதவீதம் மெதுவாக உயர்ந்து வருகிறது. மார்ச் மாதம் தொற்று சதவீதம் 10% கீழ் இருந்த நிலையில், செங்கல்பட்டில் – 11.8%, கன்னியாகுமரி – 11.6%, சென்னை – 10.6%, திருச்சி – 9.8%, திருவள்ளூர் – 9.8%, ராணிபேட் – 9.5%, கோவை – 9.4%, திருவண்ணாமலை – 9.1 % ஆக பதிவாகியுள்ளது.


கொரோனாவின் Xbb 1.16 மற்றும் ba2 என்ற புதிய வைரஸ் மாறுபாடு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது சுகாதார துறை தரப்பில் தினசரி கொரோனா பரிசோதனையை 11 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பேரில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்தால் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொரோனா மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்தபோது தெரிவித்தார்.