மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 4 ஆயிரம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைப்பேறுக்கு பிந்தைய கட்டத்தில் உள்ள பெண்களின் விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்கிறார், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மறு உற்பத்தி நலவியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் கீதாஞ்சலி சச்தேவா. 


கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் ஆகியோருக்கு முதல் அலையின்போது 14.2 சதவீதம் தொற்று பாதிப்பு பதிவானது. அதுவே இரண்டாம் அலையின்போது 28.7 சதவீதமாக அதிகரித்தது. தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதைப் பார்த்தால், முதல் அலையில் 0.75 சதவீதமாக இருந்தது, இரண்டாம் அலையின்போது 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.  




கொரோனா தொற்றும் அதையொட்டி ஏற்பட்ட இறப்புகளும் அதிகரித்துள்ளதற்கு உரிய காரணம் இன்னும் தெளிவாகவில்லை. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த புதுப்புது கிருமிகள் நோயின் தீவிர பாதிப்பு அதிகரிப்புக்கு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் எதையும் உறுதியாகக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம். ஏனென்றால், கிருமியின் மரபணுவைப் பிரித்தரியும் பணி இன்னும் முடிவடையவில்லை. அதன் முடிவு வந்த பிறகே காரணம் தெரியவரும்” என்றும் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர் கீதாஞ்சலி கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி கடைசி வரையிலான முதல் அலைக்கட்டத்திலும், இரண்டாம் அலையில் கடந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து சென்ற மாதம் 14-ஆம் தேதி வரையிலும் மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பொதுவாகவே, இரண்டாம் அலையில் கர்ப்பிணிகளுக்கு முதல் அலையைவிட கூடுதலான பாதிப்பு என்பதைப் பார்க்க முடிகிறது என்கின்றனர்.




சாகேத் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையின் மகளிர் நலம் மற்றும் மகப்பேறியியல் மருத்துவர் அனுராதா கபூர், இந்த முறை ஏராளமான பெண்கள் தொற்றால் ஏற்பட்டு, மோசமாக பாதிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார். ”கடந்த முறை கொரோனா பாதிப்பு தொடங்கியபோது, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு கர்ப்பிணிகளைப் பாதிக்காது எனும் அடிப்படையில் வழிகாட்டல் அளித்தது. ஆனால் இந்த முறை அதற்கு நேர்மாறாக வழிகாட்டல் நெறிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாதிப்புகளில் நோயாளிகளின் நுரையீரல் மோசமான நிலையை அடைந்திருந்தன. எந்த அளவுக்கு என்றால் சிகிச்சை செய்யவே முடியாதபடி கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன” என்றும் அனுராதா கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு தொடங்கிய கடந்த ஆண்டிலிருந்து இப்போது வரை கர்ப்பிணிகள், அண்மையில் குழந்தை பெற்ற தாய்மார்கள் 2 சதவீத அளவுக்கு உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதில், பெரும்பாலான இறப்புகள் கொரோனாவால் உண்டான விஷக்காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் ஏற்பட்டவை என்றும் கூறியுள்ளது.


மேலும் படிக்க : Woman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?