மருத்துவச் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு விரிவான மறு ஆய்வை மேற்கொள்ளச் சொல்லி மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் இன்றைய கொரோனா தொற்றுச்சூழல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக விளக்கிய அவர், இந்தியாவின் இரண்டாம் அலை கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் சராசரியும் குறைந்து வருகிறது. இது கடந்த வாரத்தில் மட்டும் 30 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது. அதிக கொரோனா பாதிப்புப் புகார்கள் பதிவான மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரொனா பாதிப்பிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 7 மே 2021 அன்று உச்சத்தைத் தொட்ட நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதன்பிறகு கணிசமாகக் குறைந்து வருகிறது. இது கிட்டத்தட்ட 85 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது. 3 மே 2021-க்கு பிறகான கொரொனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 81.8 சதவிகிதத்திலிருந்து 96 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிப்பு பரிசோதனையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகம், ‘வைரஸ் பரவுதலும் கணிசமாகக் குறைந்துள்ளது. கூட்டம் கூட்டமாக மக்கள் பாதிக்கப்படும் இடங்களில் அங்கிருந்து பரவாமல் தடுக்கப்பட வேண்டும். 2020-ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும் வகையில் இருப்பதால் பெரிய அளவிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதைக் கடுமையாகப் பின்பற்றுவதையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என கொரோனா தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் வயதுவாரியான கொரோனா பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொரோனா முதல் அலைக் காலத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலைக்காலத்தில் 31-40 வயதுடையவர்களிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முதல் அலைக்காலத்தில் 21.23 சதவிகிதம் பேரும் அதுவே இரண்டாம் அலைக்காலத்தில் 22.70 சதவிகிதம் பேரும் 31-40 வயதுடையவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இதுவரை மருத்துவப் பணியாளர்களுக்கு 1.70 கோடி டோஸ்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 17.24 கோடி டோஸ்களும் முன்களப்பணியாளர்களுக்கு 2.58 கோடி டோஸ்களும் 18-44 வயதுடையவர்களுக்கு 4.53 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 26.05 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக கொரோனா மூன்றாவது அலை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர் வி.கே.பால், அடுத்தடுத்த கொரோனா பாதிப்பு காலங்களில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து அச்சம்கொள்ள வேண்டாம். இதுதொடர்பான விழிப்புணர்வை பிள்ளைகளிடமும் குடும்பங்களிடமும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்’ எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
Also Read: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?