மிதமான தொற்று முதல் கடுமையான தொற்றுவரை கொரோனா பாதிக்கபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்குள், 6.5% பேர் இறந்துள்ளதாக இந்திய கவுன்சில் ஆஃப் மருத்துவ ஆராய்ச்சி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ICMR ஆய்வு


31 மருத்துவமனைகளில் உள்ள 14,419 நோயாளிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு அந்த நோயாளிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த தரவுகளை தயார் செய்துள்ளது ICMR. மேலும் செப்டம்பர் 2020 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 17.1% பேர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை அனுபவிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. சோர்வு, மூச்சுத் திணறல், நினைவில் கொள்வதில் சிரமம் ஆகியவை பெரும்பாலான மக்களை பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. "லாங்-கோவிட்" எனப்படும் கான்செப்ட் WHO மற்றும் அமெரிக்காவின் CDC உருவாக்குவதற்கு முன்பே இந்த ஆய்வு தொடங்கப்பட்டதால், அந்த வார்த்தையும், அதற்கான வரையறைகளும் ஆய்வில் இடம்பெறவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அதோடு ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 



இறப்பு விகிதங்கள்


கொரோனா பாதித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் அதன் பிறகும் அறிகுறிகள் தொடர்ந்ததாக கூறப்படும் நபர்களின் இறப்பு, அறிகுறிகள் இல்லாதவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அடுத்த ஒரு வருடத்தில் இறப்பு ஆபத்து ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு காட்டுகிறது. அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த ஆபத்து 40% குறைவாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. 


தொடர்புடைய செய்திகள்: Mumbai Indians: முழுவதும் மும்பை இந்தியன்ஸ்.. ஆசியக் கோப்பை அணியில் ஆதிக்கம் செலுத்தும் ரோஹித் படை.. 8 வீரர்களுக்கு இடமா?


இறப்புக்கான காரணங்கள் 


மிதமான மற்றும் கடுமையான நோய்த்தொற்று கொண்டவர்களிடம் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, லேசான தொற்று ஏற்பட்டவர்களை சேர்க்கவில்லை என்று ICMR மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். கல்லீரல் அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்றவற்றைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த விஞ்ஞானி கூறுகிறார். ஏனெனில் அவர்களுக்கு கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். வைரஸ் காரணமாக ஏற்படும் உறுப்பு சேதம், வீக்கம், நுரையீரலின் செயல் இழப்பு போன்றவை மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. 



கொரோனாவின் புதிய வேரியன்ட்கள்


தற்போது புதிய மாறுபாடுகள் குறித்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி கே மிஸ்ரா திங்கள்கிழமை உயர்மட்ட கோவிட்-19 ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். EG.5 மாறுபாடு 50 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு மாறுபாடான BA.2.86, நான்கு நாடுகளில் பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷு பந்த் கூட்டத்தில் தெரிவித்தார். பொது சுகாதார அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் போன்ற நோய்களின் போக்குகளைக் கண்காணிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது